இரா.சம்பந்தனின் வெற்றிடத்திற்கு குகதாசன் நியமிப்பு

இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை தேர்தல் தொகுதியின் 9வது பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மறைந்த ஆர்.சம்பந்தனின் பூதவுடல் கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று (03) நண்பகல் வரை அங்கு வைக்கப்பட்டுள்ள சம்பந்தனின் பூதவுடல் பிற்பகல் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

அவரது உடல் இன்று பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

ஆர்.சம்பந்தனின் பூதவுடல் நாளை (04) திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வரை அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

இறுதிச் சடங்கு எதிவரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.