யாழில் மின்சாரசபை பொறியியலாளர் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் புகார்

யாழ் மின்சார சபையின் சுன்னாகம் கிளையின் பிரதான பொறியியலாளரின் என்பவரின் தவறான வழிநடத்தலால், தனது வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறி நபர் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில்,

பளைப் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரிடம் தனது மனைவியின் மருத்துவ செலவுக்காக வீட்டை அடைவு வைத்து ஒரு தொகை பணத்தை வாங்கிக் கொண்டு அடகுவைத்துள்ளார். அடகு வாங்கிய பளைப் பிரதேசத்தை சேர்ந்த நபர் வீட்டில் இருப்பவர்களை அப்புறப்படுத்தி வீட்டை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக வீட்டின் உரிமையாளர் கூறினார்.

தனது பெயருக்கு மாற்றப்பட்ட அடைவு உறுதியை சுன்னாக மின்சார சபை பணிமனையில் காண்பித்து உயர் அதிகாரி ஒருவரின் அனுமதியுடன் குறித்த வீட்டின் மின் இணைப்பையும் துண்டித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் அடைகுகாரரிடம் தனது வீட்டை மீட்பதற்கு வாங்கிய பணத்தையும் அதற்கான வட்டியையும் செலுத்துவதற்கு தான் தயாராக இருப்பதாக பலமுறை தெரிவித்தும் அவர் அதற்கு தயாராக இல்லை எனவும் வீட்டின் உரிமையாளர் கூறினார்.

மேலும் வீட்டின் மின்சார பட்டியல் இன்றுவரை தமது பெயரிலேயே உள்ள நிலையில் மின்சாரசபை அதிகாரிகள் முன் அறிவித்தல் கூட இல்லாமல் மின் இணைப்பை துண்டித்ததாக வீட்டின் உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் அடகு பிடிக்கும் நபருக்கும், மின்சாரசபையின் சுன்னாகம் கிளை பிரதம பொறியியலாளருக்கும் தொடர்புள்ளதாக தெரிவித்த பாதிக்கப்பட்ட நபர், அதன் அடிப்படையிலேயே தனது வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.