இனி எரிபொருளுக்காக நீண்ட நேரம் வரிசையில் நிக்க தேவையில்லை

எரிபொருள் நிலையங்களில் இருந்து எரிபொருளை பெறுவதற்கான நேரங்களை பொதுமக்களுக்கு வழங்க எரிசக்தி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் தாங்கிய லொறிகள் புறப்பட்டவுடன் மக்களுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அறிவிப்பை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போது எரிபொருளுக்காக பல மணிநேரங்களாக மக்கள் காத்திருப்பதாகவும், இதனை தவிர்ப்பதற்காக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் குறித்த தகவல்களை வழங்கக்கூடிய மொபைல் போன் செயலி உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த 10 நாட்களில் குறித்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் எரிபொருள் விநியோகம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.