யாழ்.இலங்கைவங்கி அருகில் உள்ள CCTVயில் சிக்கிய திருடன் அகப்பட்டார்

நெல்லியடி கொடிகாமம் வீதியில் அமைந்துள்ள மருந்தகத்தில் திருடியவர் இன்று நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கரவெட்டி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 20 வயதான திருடனே கைதாகினார்.

கைதானவர் அடிக்கடி கண்ணுக்கு மருந்து வாங்குவதற்காக மருந்தகத்தில் வருபவர் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 4ஆம் திகதி மருந்தகத்தை உடைத்து உள்நுழைந்த திருடன், அங்கேயிருந்த குளிர்பானத்துக்கு ஆசைப்பட்டு முக மறைப்பை நீக்கி, குளிர்பானம் அருந்தினார். இதன்போது அவரது முகம் சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது.

இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிசார், திருடன் பயணித்த பாதையை அறிய சிசிரிவி காணொளிகளை ஆய்வுசெய்ததில், கரவெட்டி பகுதிக்கு திருடன் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, ஏற்கனவே அந்த பகுதியில் பொலிசாரின் கண்காணிப்பில் இருந்த இரண்டு திருடர்களை பிடித்து விசாரித்த போது, திருடன் பற்றிய அடையாளங்களை வெளிப்படுத்தினர்.

இதன்படி, இன்று காலை திருடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். பொலிசார் சென்றபோது, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் பொழுது அணிந்திருந்த உடை வெயிலில் காய்ந்து கொண்டிருந்தது.

அத்துடன், திருட்டுக்கு பயன்படுத்திய பொருட்கள் வீட்டிலிருந்து மீட்கப்பட்டன. மருத்தகத்தில் திருடப்பட்ட மருந்துகள், பணம் மீட்கப்பட்டது. மருந்தகத்தில் திருடப்பட்ட 20,000 ரூபா பணத்தை செலவிடாமல் வீட்டில் வைத்திருந்ததால், அனைத்து பணமும் கைப்பற்றப்பட்டது.

தற்போது அவர் நெல்லியடி பொலிஸ் நிலயத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். நாளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.