பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் வெளியான தகவல் !

நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைளினதும் கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் பின்னர் சுகாதார அமைச்சின் அனுமதியுடன், திட்டமிட்ட அடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் முகமாக தற்போது ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் மேல் மாகாணத்தில் இன்று (19) வரை, 97 சதவீதமான ஆசிரியர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் 83 சதவீதமானோருக்கும், ஊவா மாகாணத்தில் 68 சதவீதமானோருக்கும், வடமேல் மாகாணத்தில் 58 சதவீதமானோருக்கும், வடக்கு மாகாணத்தில் 57 சதவீதமான ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

வடமத்திய மாகாணத்தில் 56 சதவீதமானோருக்கும், சப்ரகமுவ மாகாணத்தில் 52 சதவீதமானோருக்கும், மத்திய மாகாணத்தில் 42 சதவீதமானோருக்கும், கிழக்கு மாகாணத்தில் 27 சதவீதமான ஆசிரியர்களுக்கும் மேற்படி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.