ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை தனதாக்கிய சீனா

டோக்கியோ இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்க பதக்கத்தை சீனா வீராங்கனை வென்றுள்ளார்.

பெண்கள் 10 மீற்றர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனாவைச் சேர்ந்த யாங் கிங் என்ற வீராங்கனையே முதல் தங்க பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.

இறுதிப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென்கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க வீராங்கனைகள் உள்ளிட்ட 8 பேர் தகுதி பெற்றனர்.

இதில் 10மீற்றர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில், தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்த நோர்வே வீராங்கனை இறுதிச் சுற்றில் தோல்வியடைந்தார்.

இறுதி போட்டியில் சீனாவைச் சேர்ந்த யாங் கிங் 251.8 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் வென்றார். இதன்மூலம் சீனா டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற நாடாக உள்ளது.

இரண்டாவதாக, ரஸ்யாவைச் சேர்ந்த கைலானா அனஸ்டாசிட்ட 251.1 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். அடுத்து , சுவிட்சர்லாந்தை சேர்ந்த சரிஸ்டென் நினா 230.6 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தை வென்றார்.

இதேவேளை தகுதிச்சுற்றில் சீன வீராங்கனை 6 ஆவது இடத்தையும், ரஸ்ய வீராங்கனை 7 ஆவது இடத்தையும், சுவிட்சர்லாந்து வீராங்கனை 8 ஆவது இடத்தையும் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போட்டியில் 50 பேர் கலந்து கொண்டதுடன் இலங்கை சார்ப்பில் போட்டியிட்ட டொஹானி எகொடவெல 49 ஆவது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.