மாணவிகளின் ஆடைகளை களைந்து மெடிக்கல் செக்கப் செய்த மருத்துவர் : நடந்த விபரீதம்!!



திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே கருமஞ்சிறையில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மத்திய அரசின் சீர்மிகு திட்டத்தின் கீழ் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமிற்கு மத்திய அரசின் சார்பில் சிறார் நலத்திட்ட பரிசோதனைக்காக ஆண் டாக்டர் ஒருவர் மட்டுமே அங்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முதல் கட்டமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளை பரிசோதனைக்காக வந்த ஆண் டாக்டர் ஒருவர் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பரிசோதனையின்போது டாக்டருடன், வேறு பெண் டாக்டர்களோ அல்லது நர்ஸ்களோ இல்லை என்றும் தெரிகிறது.

இதனையடுத்து இந்த செக்கப் நடந்த மறுநாளே, அந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர், “நாங்க ஸ்கூலுக்கு போக மாட்டோம்” என்று தங்களது பெற்றோர்களிடம் அழுதுகொண்டே கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காரணத்தை கூறுமாறு அவர்களிடம் கேட்டுள்ளனர். அப்போதுதான், ஆண் டாக்டர் ஒருவர், மெடிக்கல் செக்கப் என்ற பெயரில், ஆடைகளை களைந்த விவரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது

விஷயத்தை கேட்டு கொந்தளித்து போன பெற்றோர்கள், மாணவிகளுடன் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகளை வகுப்பறைகளுக்கு அனுப்பாமல், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னத்தூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பேசிய பெற்றோர்கள், மாணவிகளை செக்கப் செய்யும்போது ஒரு பெண் டாக்டரையோ அல்லது பெண் நர்ஸ்ஸையோ அல்லது குறைந்தபட்சம் பள்ளி ஆசிரியையோ பக்கத்தில் வைத்து கொண்டு இந்த மெடிக்கல் செக்கப்பை ஏன் நடத்தவில்லை என்று போலீசாரிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் பெற்றோர் சார்பில் புகார் மனுவும் தரப்பட்டது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட துணை இயக்குனர் உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்பும், சமாதானம் ஆகாத பெற்றோர்கள், டாக்டர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று உறுதியாக சொல்லிவிட்டு அங்கிருந்து கலைந்து விட்டனர்.

எனினும் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பேசியபோது, “பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறுவதுபோல தவறான முறையில் பரிசோதனை செய்யப்படவில்லை. அங்கு தவறு நடைபெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
செக்கப் செய்யும் இடத்தில் பெண் நர்ஸ், பள்ளியின் டீச்சர்கள் இருந்ததாகவும், இருப்பினும் புகாரின்படி சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஏதேனும் தவறு நடந்திருந்தால் தொடர்புடைய மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.