தூக்கில் போட இருந்த தமிழ் இளைஞருக்கு கிடைத்த நிவாரணம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் நாளை தூக்கிலிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், அவரது தண்டனை மே 20ம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த 36 வயது நபரை, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நாளை தூக்கிலிட திட்டமிடப்பட்டது. இந்நிலையில், குறித்த நபருக்கு தற்காலிக நிவாரணமாக அவரது தண்டனை மே 20ம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்சிணாமூர்த்தி தொடர்பான வழக்கில் அவரது சார்பில் முன்பு ஆஜராகி வந்த சட்டத்தரண் எம்.ரவி, தமது கட்சிக்காரரின் மேல்முறையீட்டு வழக்கு மே 20ம் திகதி விசாரிக்கப்பட உள்ளதால், நாளைய தினம் திட்டமிடப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளதுள்ளதாக கூறியுள்ளார்.

2011ம் ஆண்டு சிங்கப்பூருக்குள் சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதாக தட்சிணாமூர்த்தி குற்றம்சாட்டப்பட்டார்.

சக மலேசியரான நாகேந்திரன் கே. தர்மலிங்கம் புதன்கிழமை தூக்கிலிடப்படுவதற்கு முன்பு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மரண தண்டனை கைதியாக சிறையில் இருந்தார்.

போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது சம்பந்தப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழையும்போதே தெளிவுபடுத்தப்படும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் கூறுகிறது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் நேற்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.

இவர் அறிவுசார் குறைப்பாடு உள்ள மாற்றுத்திறனாளி என்றும் இவரின் மரண தண்டைனை நிறுத்தப்பட வேண்டும் என்றும் செயற்பாட்டாளர்கள் பலர் கோரிக்கை வைத்திருந்த நிலையிலும் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.