துப்பாக்கிச் சூட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 4 பேர் பலி!

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பாதாள உலகக் குழுவான சமன் ரோஹித்த என அழைக்கப்படும் ‘பாஸ் போட்டா’ உயிரிழந்துள்ளார்.

வாகனமொன்றில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள், வழக்கு ஒன்று தொடர்பாக நீதிமன்றில் ஆஜராகியிருந்த ‘பாஸ் போடா’ மற்றும் மூன்று பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதேவேளை, இரத்மலானை சில்வா மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் நுழைந்து அவரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இரத்மலானையைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கொலைக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், அம்பலாங்கொடை கலகொட பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஆரம்பத்தில், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் படுகாயமடைந்த நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொட, கலகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.