பரிதாபமாக கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை : வெளியான காரணம்!

கொழும்பில் வீட்டின் மாடியில் இருந்து குழந்தை தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குழந்தை பற்றிய மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிராண்ட்பாஸ், சமகிபுர பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையொன்று, தாயின் மூத்த சகோதரனால் தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த குழந்தையின் தாயின் மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் முகமது யூசுப் என்ற குழந்தை உயிரிழந்தது. கைது செய்யப்பட்ட 35 வயதுடைய சந்தேகநபரின் மாமா மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் சில காலமாக அங்கொட மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை, கொலை செய்யப்பட்ட குழந்தையின் தாய் மற்ற இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டிருந்த போது, ​​அறைக்குள் நுழைந்த சகோதரர், திடீரென மேல்மாடி ஜன்னல் வழியாக குழந்தையை கீழே வீசியுள்ளார்.

குழந்தை கீழே விழுந்ததையடுத்து, அந்த இடத்தில் கூடிய மக்கள், குழந்தையை வாகனத்தில் ஏற்றி, பொரளை, ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அங்கு குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள், குழந்தை உயிரிழந்து விட்டதாக உறவினர்களுக்கு அறிவித்துள்ளனர்.

“இதைச் செய், அதைச் செய் என்று யாரோ என் காதில் சொல்கிறார்கள். அவர் என்ன சொன்னாலும் நான் செய்வேன்” என சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தாரகாவின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.