இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 38 பேர் பலி

மத்திய செனகலில் உள்ள கஃப்ரின் நகருக்கு அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் 87க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தைத் தொடர்ந்து, நாளை முதல் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் மேக்கி சால் அறிவித்துள்ளார்.

“இந்த பயங்கரமான சாலை விபத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”

தேசிய துக்கம் முடிந்ததும், “சாலை பாதுகாப்பு குறித்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க” அரசாங்க கவுன்சில் நடத்தப்படும் என்று ஜனாதிபதி சால் கூறினார்.

இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்ததாக செனகல் அரசு வழக்கறிஞர் தனி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அரசு வழக்கறிஞர், Cheikh Dieng, முதற்கட்ட விசாரணையில், “பயணிகளின் பொது போக்குவரத்துக்காக நியமிக்கப்பட்ட பேருந்து, டயர் வெடித்ததைத் தொடர்ந்து அதன் பாதையை விட்டு வெளியேறி, எதிரே வந்த மற்றொரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதால் விபத்து ஏற்பட்டது” என்று சுட்டிக்காட்டினார்.

விபத்தின் பின்னர், இடிபாடுகள் மற்றும் இடித்துத் தள்ளப்பட்ட பேருந்துகள் அகற்றப்பட்டு, அந்த வீதியில் வழமையான போக்குவரத்து ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.