யாழில் அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை !

யாழ்ப்பாணம், கொக்குவில் – பொல்பதி வீதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று யாழ். நீதவான் நீதிமன்றப் பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தா, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெத்தேகேரா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள் ஆகியோர் தலைமையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

பாதுகாப்பு பணியில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், ஆயுதங்கள் எதுவும் கிடைக்காததால் அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டன.

நான்கு இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை.

அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற இடத்துக்கு அருகிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மத்தியாஸின் முகாமும் புலிகளின் சட்ட மருத்துவக் கல்லூரியும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇத்தாலியில் கோர விபத்தில் சிக்கி இலங்கை இளைஞரொருவர் பலி !
Next articleகொழும்பு மேயர் வேட்பாளராக களமிறங்கும் முஜிபுர் ரஹ்மான் !