யாழில் வெளிநாட்டிலிருந்து கூலிப்படைக்கு பணம் அனுப்பபட்டு வர்தக நிலையம் மீது தாக்குதல் !

யாழ்ப்பாணம் கல்வியங்காடு வர்த்தக நிலையம் மீதான தாக்குதல் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பி கூலி ஆட்களை பயன்படுத்தி நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்விப் பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் மற்றும் அதன் உரிமையாளர் மீது இனந்தெரியாத சிலர் நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தை மூடுவதற்கு தயாரான போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உரிமையாளரை வாளால் வெட்டி, வர்த்தக நிலையத்தை அடித்து நொறுக்கி, வர்த்தக நிலையத்திலிருந்த ஐந்து இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார், சட்ட வைத்திய பொலிசார் மற்றும் கோப்பாய் பொலிசார் இணைந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குறித்த குழுவினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.