தலைவர் காட்டிய சின்னம் குறித்து பெருமையாக கூறும் பாராளுமன்ற உறுப்பினர் இரா,சாணக்கியன்

தலைவர் காட்டிய சின்னம் வீட்டுச் சின்னமாகும். இதனை பெருமையாக நாம் கூறுகின்றோம். இதே சின்னத்தினைக் கொண்டு அனுராதபுரத்தில் போட்டியிடலாமா. வேட்பாளர் தருவார்களா.அப்படியான நிலையுள்ள போது எந்த அடிப்படையில் தெற்கில் இருக்கும் கட்சிகள் இங்கு போட்டி போடும் எப்படி வேட்பாளர்களை நிறுத்தலாம், எப்படி வாக்களிக்கலாம்’ என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா,சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபைக்காக இலங்கை தமிழரசு கட்சி சார்பில் 10 ஆம் வட்டாரம் கறுவாக்கேணி போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் கறுவாக்கேணியில் இலங்கை தமிழரசு கட்சியின் கல்குடாத் தொகுதி கிளை செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான க.நல்லரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா,சாணக்கியன் தெரிவித்ததாவது….

இன்று தலைவரை வைத்து அரசியல் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். அதற்காக பல வதந்திகளை கூறுகின்றனர். தயவு செய்து தலைவரை வைத்து அரசியல் செய்யவேணடாம் என்றார்.

தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் சுதந்திரமாக மக்களை மக்களே ஆளவேண்டும். தமிழர்களே தமிழர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

தந்தை செல்வா 1948 இல் சொன்ன கட்சி. தெற்கிலே உள்ள மக்கள் எங்களை ஏமாற்றுகின்றார்கள் சிங்கள அரசாங்கம் எங்களை ஏமாற்றுகின்றது. அரசியல் தீர்வை பேச்சுவார்த்தை மூலம் எடுக்கமுடியாது. எத்தனையோ அநீதிகள் இடம்பெற்றதால் இளைஞர்கள் வேறு வழியில்லாமல் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். அகிம்சை வழியில் இருந்த எங்களை ஆயுதம் ஏந்தி போராட வைத்தவர்கள் தெற்கில் இருந்த அரசாங்கம். தொடர்ந்து 2009 இல் உலக நாடுகளெல்லாம் ஒன்றிணைந்து போராட்டத்தினை மௌனிக்கச் செய்தனர்.

அதனால் தொடர்ந்து தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் கட்சியாக இலங்கை தமிழரசு கட்சி தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. இதேவேளை போராட்டத்தின் வடிவம் மாறியுள்ளதே தவீர இலக்கு மாறவில்லை.இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கும்போது பலர் இன்று பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

கல்குடா தொகுதியில் கல்மடு, கறுவாக்கேணி, கொண்டையன்கேணி, சந்திவெளி மற்றும் கிரான் போன்ற இடங்களில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் மக்கள் சந்திப்பும் கட்சி அலுவலகங்களும் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தமிழரசு கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்க்ள கட்சியின் மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.