வலி.வடக்கு தையிட்டி விகாரைக்கு விஜயம் செய்த மல்லாகம் நீதவான்

வலி.வடக்கு தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு மல்லாகம் நீதவான் காயத்திரி களவிஜயம் மேற்கொண்டு விபரங்களை ஆராய்ந்துள்ளார்.

இதன்போது குறித்த காணிக்கு முன்னுள்ள தனியார் காணியின் எல்லை பகுதியினுள் எவ்வித குழப்பங்கள், கோசங்கள் இன்றி அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என  நீதவான் காயத்திரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு இன்று(04.05.2023) காலை கைது செய்யப்பட்ட ஜந்து பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

ஜந்து பேருக்கும் பிணை

வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து நேற்று புதன்கிழமை (03.05.2023) கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விகாரையை சுற்றியுள்ள காணி

விகாரையை சுற்றியுள்ள காணிகளையாவது விடுவிக்குமாறு கோரியும், சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தொடரச்சியாக மூன்று நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனியார் காணியொன்றில் பந்தல் அமைக்க முயன்றபோதும் அதற்கு இடமளிக்காத பொலிஸார் பந்தல் காரர்களை அச்சுறுத்தியதுடன் பந்தல்களையும் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டகாரர்களை அச்சுறுத்தி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.