இலங்கையில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயம்! படையெடுக்கும் பக்தர்கள் !

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம், இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயமாகும்.

புங்குடுதீவின் வரலாற்று பெருமைமிகு கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்கு விழா எதிர்வரும் 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தின் வரலாற்று பின்னணியை ஆராய்ந்து பார்ப்பது சால சிறந்ததாகும்.

கண்ணகி மதுரையை எரித்தபின் தென்னிந்தியாவில் இருந்து காவல் தெய்வமான பத்திரகாளி அம்பாள் துணையோடு பேழையில் வந்து புங்குடுதீவின் தென்கடலில் கோரியாவடி பகுதியில் கரையொதுங்கியதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு கரையொதுங்கிய பேழையை, பசுமாடுகள் கடலுக்குள் சென்று சுற்றிவர பாதுகாத்து நிற்க! தான் வளர்த்த பட்டி மாடுகளை தேடிச் சென்றவர் தனது பசுக்கள் ஒரு பேழையை சுற்றி நிற்பதை கண்டு அதற்குள் பொன்னோ பொருளோ இருக்குமென்றும் , தனக்குப் புதையல் கிடைத்ததகாக எண்ணி கடற்கரையோரம் வீட்டுக்கு தலையில் பேழையை சுமந்தபடி தற்போதைய கண்ணகைபுரம் வரை எடுத்து சென்றுள்ளார்.

அவர் செல்லும் வழியில் பேழையின் பாரம் அதிகமாகியதாகவும் அதனால் பேழையை இரண்டு இடங்களில் இறக்கி வைக்கிறார். (இறக்கி வைத்த இவ்விரு இடங்களிலும் இரு ஆலயங்கள் அமையப் பெற்றுள்ளன) மீண்டும் தன் பயணத்தை தொடர்கிறார்.

மூன்றாவது இடமாக தற்போது அமைந்துள்ள இடமான கண்ணகி அம்மன் ஆலயத்தின் தெற்குப்புறம் உள்ள தெற்பக்குளம் அருகே உள்ள பெரிய பூவரசு மரத்தின் அடியில் வைத்து மறுபடி தூக்க முயல்கையில் பேழையை அசைக்கமுடியாது போகவே பேழையைத் திறந்து பார்த்துள்ளார்.

அதற்குள் ஒற்றை தனத்தோடு உள்ள கண்ணகி அம்மனும் பத்திரகாளி அம்மன் சிலைகளும் இருக்கக் கண்டு கைகூப்பி வணங்குகியுள்ளார்.

பாரம் சுமந்த களைப்பில் அவ்மரத்தடியில் சிறிது ஓய்வுக்காக துண்டை விரித்து தூங்கியுள்ளார்.

இதன்போது அவரது கனவில் எழுந்தருளி தான் கண்ணகி என்றும் மதுரையில் இருந்து வந்துள்ளேன் எனக்கு இவ்விடத்திலேயே கோவில் எழுப்புவாயாக என்றும் கண்ணகி அம்மன் கூறியதாக சொல்லப்படுகின்றது.

கற்புக்கரசியான கண்ணகித்தாய் கரை வந்து சேர்ந்த செய்தி புங்குடுதீவெங்கும் காட்டுத்தீ போல் பரவ ஊர் மக்கள் அங்கு கூடிடவே அனைத்து மக்களும் கண்ணகிக்கு ஒரு சிறு குடில் அமைத்து வழிபட்டு வரலாயினர்.

ஒருமுறை பூசை நடைபெறும் நாளொன்றில் ஒரு பெண்ணை வசப்படுத்திய கண்ணகி, உருக்கொண்டு கலையாடி இங்கு எனக்கு மக்கள் துயர் துடைக்க பெரிய ஆலயம் எழுப்புங்கள் என்று கூறியதும், ஊர் பெரியவர்களும் அப்போதைய கோவில் தர்மகர்த்தாவாகிய இராசரெத்தினம் பேரனாரும் இணைந்து ஊர்மக்களிடம் கோவிலை பெரிதாக கட்ட வீட்டுக்கு சில பனை மரங்களை தந்துதவுமாறு கேட்கவே அனைவரும் அன்னையின் அருமை பெருமைகளையறியாது சடுதியாகவே மறுதலித்துள்ளனர்.

இதன் பின்னர் மனசு சஞ்சலத்துடன் வீடு திரும்பிய ஊர் பெரியவர்கள் அன்று இரவு தூக்கத்தில் இருக்கும் போது பேரிடியுடன் பெருமழை பெய்து புயல் உருவானதால், காலையில் ஒவ்வொரு வீட்டிலும் 3 தொடக்கம் 4 வரையான பனைமரங்கள் நிலத்திலும் வீதிகளிலும் வீடுகள் மேலும் சரிந்து கிடந்துள்ளது.

ஊர்மக்கள் தாமாக எங்கள் வீட்டில் பனைமரம் எடுத்துக்கொள்ளுங்கள் என எல்லோரும் வேண்டுதல் வைக்க மரங்களும் கற்களும் குவிய, பணம் படைத்தோர் பொற்காசுகள் கொடுக்க இந்த ஆலயம் பாண்டிய மன்னன் அரசவையிலே நீதிகேட்டுத் தீயிட்டெரித்த கற்புக்கரசி கண்ணகியாகி புங்கையூர் தென்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியதாக கூறப்படுகின்றது.

மதுரையை எரித்த கனலோடு அவள் இருப்பதால் தென்திசையில் இந்து மகாசமுத்திரத்தில் தன் பார்வையை செலுத்தி அமைதி கொண்டபடி இருப்பதே சிறப்பெனக்கருதி இலங்காபுரி மண்ணையும், லெமூரியா கண்டத்தில் கடற்கோள் கொண்ட முதற்சங்கம், இடைச்சங்கம் காலத்து மதுரையையும் பார்த்தவண்ணம் அருளாட்சி புரிகிறாள்.

அன்னை மகிஷாசுரனை சங்காரம் செய்தபின் எடுத்த அவதாரமான இராஜ இராஜேஸ்வரியாகி ஆதிசக்தியின் வடிவம் காலப் போக்கில் ஆகம முறைப்படி மூல விக்கிரகமாக அமைய பெற்றது.

பின்னொரு நாளில் கட்டுத்தேரில் பவனிவந்த அன்னைக்கு சித்திரத்தேர் கட்டியபோது தேர் வெள்ளோட்டம் செய்வதற்கு முதல்நாள் எந்த இடத்தில் பேழையாக வந்தடைந்தாளோ அதே இடத்தில் தேர் வடக்கயிறு வட்டமாக சுற்றிய படி வந்தடைந்தது.

இதை கண்ட ஒருவர் கப்பல் கயிறுபோலும் இதை எடுத்துச்சென்று யாழ்ப்பாணம் கயிற்றுக்கடையில் விற்றால் நல்ல இலாபம் சம்பாதிக்கலாம் என எண்ணி கையை வைத்து எடுக்க முற்படுகையில் கருநாகம் கடலலைக்குள் கயிற்றின் வளையத்தினுள் இருந்து சீறியது! அதை கண்டு நிலைகுலைந்த குடியானவன் கண்ணகித்தாயே,உனக்கே கொண்டுவந்து தருகிறேன் என்னை மன்னித்துவிடு என்று கைகூப்பி வணங்கியதும் நாகம் மறைந்ததாக சொல்லப்படுகின்றது.

அதன்பின் இன்றுவரை அதே வடம்கொண்டு தான் அம்பாளின் இரதம் இழுக்கப்படுகிறது என அறிய முடிகின்றது.

அந்த நாகம் நெடுங்காலமாக தலவிருட்சமான பூவரசமரப் பொந்தில் வாழ்ந்ததாக பலர் கூறக்கேட்டுள்ளோம்.

வெள்ளி இரதம் ஒன்று அம்பாளுக்கு என நேர்ந்து செய்தது ஆழிக்கடலுக்குள் கிடப்பதாகவும். அது கண்ணகிக்கா ..? அல்லது நயினை நாகபூசணிக்கா..? என அறியாது இரண்டு ஆலயங்களிற்கும் நடுவில் நிற்பதாக கூறப்படுகின்றது.

இவ் ஆலயங்களில் வருடாவருடம் நடைபெறும் ஆலய தீர்த்த உற்சவதினம் அன்று,கடலுக்குள் தீர்த்தமாடும் வேளை வெள்ளித்தேர்முடி கடல் மட்டத்தின்மேல் வந்து இரு அம்பாள்களையும் வணங்கி மீண்டும் ஆழ்கடலுக்குள் செல்வதாகவும் கூறப்படுகின்றது.

அந்தக்காலத்தில் இருந்து இரண்டு ஆலயங்களிலும் கடலைநோக்கி பஞ்சாலாத்தி குருக்கள்மாரால் காட்டப்படுவதாகவும் செவிவழிக் கதையுண்டு.

புங்குடுதீவின் ஆதிகாலத்தில் 1-12 வட்டார மக்களும் வண்டில் மாடுகட்டி கண்ணகி அம்பாள்மேல் பக்திகொண்டு விரதமிருந்து அம்பாள் ஆலய இரவு பகல் உற்சவங்களில் கலந்துகொண்டு தம்வாழ்வில் மேன்மையடைந்ததாக கண்ணகி அம்பாளின் பக்தர்கள் சொல்லி மகிழ்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.