புத்தளத்தில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்பு!

புத்தளத்தில் குளிக்கச் சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

புத்தளம் நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் நேற்று (02) இரவு இச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த கச்சு முஹம்மது சஹீத் ( வயது 60) மற்றும் அஜ்வாத் சஹீர்கான் ( வயது 22) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இருவரும் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டனும், பேரனும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர்கள் நேற்று மாலை குடும்பஸ்தர்கள் சகிதம் நுரைச்சோலை இளந்தையடி சவுக்குத் தோட்டத்திற்கு சென்று அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

நீரில் மூழ்கி உயிரிழப்பு

மேற்படி கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கியதை அவதானித்த அந்த இளைஞர்களின் பாட்டன், அவ்விரு இளைஞர்களையும் காப்பாற்றுவதற்காக கடலுக்குள் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது நீரில் மூழ்கிய இரண்டு இளைஞர்களில் ஒருவரை பாதுகாப்பான முறையில் வெளியே அழைத்து வந்த பாட்டன், மற்றைய இளைஞரையும் மீட்பதற்காக மீண்டும் கடலுக்குள் செல்ல தயாரான போதே அவர் திடீரென கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

நீரில் மூழ்கி காணாமல் போன மற்றைய இளைஞரை அங்கிருந்தவர்கள் நுரைச்சோலை பொலிஸார் மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இரு மணித்தியாலங்களின் பின் மீட்கப்பட்ட சடலம்

எனினும் நீரில் மூழ்கி காணாமல் போன குறித்த இளைஞனின் சடலம் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் ஆலங்குடா கரையோர பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி ஸ்தல விசாரணையை மேற்கொண்டதுடன், நுரைச்சோலை பொலிஸாரும் உறவினர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இரண்டு சடலங்களும் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த சம்பவம் நுரைச்சோலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.