செல்வம் அடைக்கலநாதனின்  வேண்டுகோளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்! 

தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு வத்திகான் மற்றும் கத்தோலிக்க சபையின் ஆசீர்வாதம் மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் மடு மாதா தேவாலய திருவிழாவில் இன்று (15.08.2023) கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மடு தேவாலய வருடாந்த திருவிழா

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”மடு தேவாலய வருடாந்த திருவிழா என்பது எமது நாட்டு கலாசாரத்தின் ஒரு அங்கம் என்றே கூற வேண்டும்.

இந்த திருவிழாவை தேசிய நிகழ்வாகக் கருதி அதனை பாதுகாக்கவும் தொடர்ச்சியாக நடத்தவும் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கி வருகிறது.

அத்தோடு வருடாந்த மடு திருவிழாவை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து அருட்தந்தையர்களுக்கும் அரசாங்கம் சார்பில் எனது நன்றியை தெரிவிக்கிறேன். மடுமாதாவிடம் பிரார்த்தனை செய்து ஆசீர்வாதம் பெற ஏராளமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

அடுத்த மாதம் முதல் மன்னாரிலிருந்து கொழும்புக்கு நகர்சேர் கடுகதி தொடருந்து சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது, சார்ளஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படுகிறது.

இதேவேளை செல்வம் அடைக்கலநாதனின் வேண்டுகோளுக்கு அமைய வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.