தம்புள்ள ஒளராவை வீழ்த்தி LPL கிண்ணத்தை பி லவ் கண்டி முதல் தடவையாக சுவீகரித்தது

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நடத்திய நான்காவது லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பி லவ் கண்டி அணி முதல் தடவையாக சம்பியனாகி எல்பிஎல் கிண்ணத்துடன் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் (3 கோடியே 19 இலட்சம் ரூபா) பணப்பரிசையும் தனதாக்கிக்கொண்டது.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் தம்புள்ள ஒளரா அணியை ஒரு பந்து மீதமிருக்க 5 விக்கெட்களால் வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

நீக்கல் போட்டியில் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் அணியை பி லவ் கண்டி அணி நொக் அவுட் செய்ததும் புதிய அணி ஒன்று சம்பியனாவது உறதியானது.

இந் நிலையில் இந்த இரண்டு அணிகளும் லங்கா பிறீமியர் லீக் இறுதிப் போட்டியில் முதல் தடவையாக விளையாடியதால் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்தும் குறிக்கோளுடன் இறுதிப் போட்டியை எதர்கொண்டன.

பி லவ் கண்டி அணியின் வழமையான அணித் தலைவர் வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஏஞ்சலோ மெத்யூஸ் அணித் தலைவராக செயற்பட்டார்.

இறுதிப் போட்டியில் தம்புள்ள ஒளரா அணியினால் நிர்ணியக்கப்பட்ட 148 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பி லவ் கண்டி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்த 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரராக தரமுயர்த்தப்பட்ட கமிந்து மெண்டிஸ் வழமையான மற்றைய ஆரம்ப வீரர் மொஹமத் ஹரிஸுடன் 39 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மொஹமத் ஹரிஸ் 26 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து கமிந்து மெண்டிஸும் தினேஷ் சந்திமாலும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலுவூட்டினர். மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் அடுத்தடுத்து ரிவேர்ஸ் ஸ்வீப் ஷொட் அடிக்க விளைந்து 44 ஓட்டங்களுடன் வெளியேறினார். (94 – 2 விக்.)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 11 ஓட்டங்கள் சேர்த்த போது ஓட்ட வேகத்தை அதிகரிக்க எண்ணி சிக்ஸ் அடிக்க முயற்சித்த தினேஷ் சந்திமால் 24 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

அடுத்து களம் புகுந்த சத்துரங்க டி சில்வா தான் எதிர்கொண்ட 4ஆவது பந்தில் சிக்ஸ் அடிக்க விளைந்து ஓட்டம் பெறாமல் விக்கெட்டைத் தாரைவார்த்தார். (107 – 4 விக்.)

இந் நிலையில் அசிப் அலி ஓட்ட வேகத்தை அதிகரிக்க விளைந்து 10 பந்துகளில் 19 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இது பி லவ் கண்டி அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. (132 – 5 விக்.)

எனினும் மறுபக்கத்தில் புத்திசாதுரியத்துடன் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்யூஸ் ஆட்டம் இழக்கமால் 25 ஓட்டங்களைப் பெற்றதுடன் லஹிரு மதுஷன்க கடைசிப் பந்துக்கு முந்திய பந்தில் பவுண்டறி அடித்து பி லவ் கண்டி அணி சம்பியனாவதை உறுதிசெய்தார். லஹிரு மதஷன்க 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அஹ்மத் 4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பினுர பெர்னாண்டோ 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தம்புள்ள ஒளரா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

ஓட்டங்களை பெறுவதில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட தம்புள்ள ஒளரா முதல் 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 32 ஓட்டங்களையும் இரண்டாவது 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ஓட்டங்களையும் மூன்றாவது 5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 32 ஓட்டங்களையும் கடைசி 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 47 ஓட்டங்களையும் பெற்றது.

ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ அவசரப்பட்டு துடுப்பை விசுக்கியதால் 5 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (11 – 1 விக்.)

அணித் தலைவர் குசல் மெண்டிஸும் சதீர சமரவிக்ரமவும் 2ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சதீர சமரவிக்ரம 36 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (68 – 2 விக்.)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 3 ஓட்டங்கள் சேர்ந்தபோது குசல் மெண்டிஸ் 22 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந் நிலையில் குசல் பேரேராவும் தனஞ்சய டி சில்வாவும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 63 ஒட்டங்களைப் பகிர்ந்த அணியை நல்ல நிலையில் இட்டனர்.

தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். குசல் மெண்டிஸ் 31 ஓட்டங்களுடனும் அலெக்ஸ் ரொஸ் 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் சத்துரங்க டி சில்வா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நுவன் ப்ரதீப், மொஹமத் ஹஸ்னய்ன் அகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த சுற்றுப் போட்டியில் 2ஆம் இடத்தைப் பெற்ற தம்புள்ள ஒளரா அணிக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா) பணப்பரிசு வழங்கப்பட்டது.