நோர்வே தேர்தலில் சாதித்த தந்தை மற்றும் மகள்

நோர்வே – ஒஸ்லோ தேர்தல்களில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகளுமான அனீஸ் ரவூப் மற்றும் அவரது மகளான தமீனா செரிப்டீன் ரவூப் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

தந்தையும் மகளும் இருவேறு பிரதான கட்சிகளின் சார்பில் முறையே கன்சர்வேட்டிவ் கட்சியிலும், தொழிலாளர் கட்சியிலும் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளனர். உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகளை அடுத்து, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியில் தந்தை  மற்றும் மகள்

தனது தேர்தல் வெற்றி குறித்து, தொழிலாளர் கட்சியில் போட்டியிட்ட தமீனா கருத்து தெரிவிக்கையில்,

“நான் ஒஸ்லோவை இன்னும் சிறந்த, பாதுகாப்பான மற்றும் பசுமையான நகரமாக மாற்றுவதற்கு போராடுவதற்கு பெரிய திட்டங்களை வைத்திருக்கிறேன்” மேலும், எனக்கு வாக்ளித்த சகலருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே தொழிலாளர் கட்சியின் ஆலோசகராகவும் தமீனா பணியாற்றி வருகின்றார்.

அதேவேளை கன்சர்வேட்டிவ் கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அனீஸ் ரவூப், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்  என்பது குறிப்பிடத்தக்கது.