சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மீட்பு!

கற்பிட்டி – மாம்புரி பிரதேசத்தில் இருந்து குளிப்பாட்டிக்கு லொறி ஒன்றின் மூலம் தும்புத் தூள் என்ற போர்வையில் சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 2 கோடிக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகளை கைப்பற்றியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகத்தின் பெயரில் குறித்த லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் – அலவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (10) அதிகாலை 1 மணி அளவில் மதுரங்குளி நகரில் வைத்து லொறி ஒன்றை சோதனை செய்த போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் பேரில் குறித்த லொறியை பொலிஸார் சோதனை செய்த போது, லொறியினுள் மிகவும் சூட்சமான முறையில் தும்புத் தூள் சாக்குகளை லொறியின் பின்புறமாக வைத்து உள்ளே 78 மூடைகளில் சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான பீடி இலைகள் காணப்பட்டன.

இந்த பீடி இலைகள் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக இயந்திரப் படகு மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது கைப்பற்றப்பட்ட பீடி இலைகளையும், லொறியையும் சந்தேக நபரான லொறி சாரதியையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.