உண்மையான உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு வீட்டுரிமை

அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் உண்மையான உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு வீட்டுரிமையை  மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இவ்வாறான கோரிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் அமைச்சின் மக்கள் தினத்தன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொரளை, ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீடமைப்புத் திட்டத்தின் வீட்டு அலகுகளை உண்மையான  உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு நேரடியாக மாற்றுவதற்கு அனுமதி கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.

பொரளை, ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீடமைப்புத் திட்டம் என்பது அரச ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட நடுத்தர வருமான வீட்டுத் திட்டமாகும். நவீன வசதிகளுடன் கூடிய 24 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. இந்த வீட்டுத் தொகுதியில் 608 குடியிருப்புகள் மற்றும் 5 வணிக அலகுகள் உள்ளன.

அதன்படி, வீட்டிற்குரிய முழுப் பெறுமதி மற்றும் தண்டப் பணத்தைச் செலுத்தி முடித்த கொள்வனவாளர்கள்  247 பேருக்கு இந்த வீட்டுத் திட்டத்தின் வீட்டுரிமையை வழங்குதல் என்ற அடிப்படையில் இந்த வீடுகள் விடுவிக்கப்படும்.

உண்மையான உரிமையாளர் உயிருடன் இருக்கும் போது அவர் இந்த வீடு தொடர்பாக வங்கிக் கடன் பெறவில்லை என்றால், வீட்டின் உரிமையை நேரடியாக உரிமையாளரின் பிள்ளைகளுக்கு மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது