லன்ச் ஷீட்டை தடை செய்யுமாறு முன்மொழிவு!

இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சிச்  செயல்முறையை மேம்படுத்துதல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் கூடியது.

சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை சுங்கம், கமத்தொழில் அபிவிருத்தித் திணைக்களம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவும் அன்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தனர். 

இதன்போது, இந்நாட்டில் லன்ச் ஷீட்கள் (Lunch Sheet) பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும், அவற்றில் காணப்படும் தலேட் எனும் புற்றுநோய்க் காரணி மனித உயிர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. 

அதற்கமைய, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, லன்ச் ஷீட்கள் பயன்படுத்துவதை தடை செய்தல் மற்றும் மாற்றீடுகளை அறிமுகப்படுத்துவதற்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்குவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரை வழங்கியது. 

உலகில் எந்த நாட்டிலும் லன்ச் ஷீட்கள் பயன்படுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகள், லன்ச் ஷீட்களை பயன்படுத்தாமல் இருப்பதன் முக்கியத்துவத்தையும் குழுவில் சுட்டிக்காட்டினர்.

சுற்றாடல் சட்டத்தைத் திருத்துவதற்கு தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குழுவில் கருத்திற் கொள்ளப்பட்டதுடன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு விசேட விடயங்கள் முனவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். 

பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சிக்காக மீண்டும் சேகரிப்பது அவற்றை உற்பத்தி செய்து விநியோகிப்பவர்களுக்கே வழங்கவேண்டும் என இதன்போது குழு முன்மொழிந்தது. 

அதற்கமைய, புதிய தொழிநுட்பம் மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி பல்வேறு தேவைகளுக்காக விநியோகிக்கும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் சேகரித்து மீள்சுழற்சி செயன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்கான முறைமையை தயாரிப்பது சட்டத்தைத் திருத்துவதன் நோக்கமாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 அந்த பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதை வினைத்திறனான வகையில் மேற்கொள்வதற்கு வெற்று போத்தல்களுக்கு குறிப்பிட்ட அளவு பணம் வழங்கப்பட வேண்டுமென குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

அத்துடன், இலங்கைக்கு தற்பொழுது இறக்குமதி செய்யப்படும், ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபகரணங்கள் மற்றும் பொருட்களைக் கண்டறிந்து அவற்றைப் பட்டியலிட்டு குழுவுக்கு அறிக்கையொன்றை வழங்குமாறு துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.