பாடசாலைகளில் இருந்து இனவாதத்தை ஒழிக்க வேண்டும்!

தேசிய ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு என பேசிக் கொண்டாலும் அதனை யதார்த்தமாக்க வேண்டுமானால் ‘தேசியப் பாடசாலைகளைக்குப்’ பதிலாக நாட்டில் உள்ள ஒவ்வொரு பாடசாலையும் ‘சர்வ தேசியப் பாடசாலைகள்’ என மாற்ற வேண்டும் என்றும், அதில் சிங்களம், முஸ்லிம், தமிழ், பௌத்தம், இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம், பர்கர் என ஒவ்வொரு சமூகத்தினரும் இணைந்து கற்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும், இவ்வாறானதொரு மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் ஏற்படுத்துவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சில அரசியல்வாதிகள் கதிர்காமம் சென்று கணதேவியையும்,கடவுளையும்,

விஷ்ணுவையும் வழிபட்டு விட்டு வடக்கே சென்று கோவில் கட்டுவது கூடாது எனக் கூறிக்கொண்டு இரட்டை நிலைப்பாட்டை  பின்பற்றுவதாகவும், இதற்கு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியின் கம் உதாவ நிகழ்ச்சியில் குறிப்பிட்டளவு பதில் வழங்கி ஒவ்வொரு கிராமத்திலும் விகாரை, கோவில், பள்ளிவாசல் என நிர்மானிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இனம், மதம் என பிளவுபட்டு நிற்பதை விட அனைத்து இன, மதத்தினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும், அனைவரின் மதம், கலாச்சாரம் மற்றும் இனத்தை மதிக்கும் சர்வ மத, சர்வ இன தேசியம்  உருவாக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு முதுகெழும்பை நேராக வைத்துக் கொண்டு ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு பேச வேண்டும் என்றும், இந்த வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வரும்போது இனவாதம், மதவாதம், தீவிரவாதம் போன்றவற்றை விட்டொழிய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவிற்கு அமைவாக பிரபஞ்சம் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் 53 ஆவது கட்டமாக மத்திய கொழும்பு கணபதி இந்து மகளிர் கல்லூரிக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று (08) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச சாதாரண தரம் வரை படித்திருந்தாலும் அவருக்கு நடைமுறை அறிவு இருந்ததால் ஒக்ஸ்போர்ட் போனவர் போல,நாட்டில் இரு பக்கங்களிலும் 2 யுத்தங்கள் நடந்த போதும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைத்து வந்து 200 ஆடைத் தொழிற்சாலைகள் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், மக்களை நினைத்தே அவரால் இது மேற்கொள்ளப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சிலர் பாடசாலைகளுக்கு பஸ்களை வழங்குவதற்கு பதிலாக நாடு முழுவதும் நூறு இரு நூறு என கூட்டங்களை நடத்தி மக்கள் அலை தம் பக்கம் இருப்பதாக போலியாக காட்டிக் கொள்ளவதாகவும்,இதன் மூலம் 41 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும்,இதன் காரணமாகவே ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய மக்கள் சக்தி வேறுபட்ட கட்சி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.

பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 53 அரச பாடசாலைகளுக்கு 497 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.