வெளிநாட்டு சிகரெட்டுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் வர்த்தகர் ஒருவரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 22 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் குழுவினர் இன்று (11) அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கம்பளை, புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய வர்த்தகர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறிய போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அடிக்கடி வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு வருபவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டுபாயில் இருந்து ஓமன், மஸ்கட் நகருக்கு வந்த அவர், இன்று (11) அதிகாலை 03.30 மணியளவில் சலாம் எயார் விமானம் OV-437 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் 22,800 “மென்செஸ்டர்” வகையைச் சேர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 114 சிகரெட் அட்டைகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன் , சந்தேக நபரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.