மின்சாரசபை ஊழியர்களின் விடுமுறை ரத்து!

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்து விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக மாறியுள்ள நிலையில், இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் பொறியியலாளர் நரேந்திர டி சில்வா இந்த சுற்றறிக்கையை வௌியிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், அவசர தேவைகளுக்காக சம்பந்தப்பட்ட கிளை / பிரிவின் ஊடாக நிர்வாக அதிகாரியின் ஒப்புதலுடன் மட்டுமே ஊழியர்கள் விடுமுறையை எடுக்க முடியும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக இன்று (03) முதல் 3 நாள் தொடர் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அறிவித்திருந்தது.

இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.