பண வீக்கம் அதிகரிக்கும் சாத்தியம்!

இந்த மாதம் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் என மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு மற்றும் காலநிலை சீர்கேடு போன்ற காரணிகளினால் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக காலநிலை சீர்கேட்டினால் விநியோகத்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் பணவீக்கத்தை அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தில் பாதகநிலை 

குறுகிய காலத்திற்கு ஏற்பட்ட காலநிலை மாற்றமானது தற்பொழுது வழமைக்குத் திரும்பி வருவதாகவும் இதனால் பணவீக்க அதிகரிப்பும் தற்காலிகமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீண்ட கால அடிப்படையில் மத்திய வங்கியின் இலக்கான 5 வீதத்திற்கு குறைவாக பணவீக்கத்தை பேண முடியும் என நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நுகர்வோர் விலை சுட்டியின் பிரகாரம் பணவீக்கம் 4.2 வீதமாக காணப்பட்டதாகவும், இது இந்த மாதம் 7 வீதமாக உயர்வடையலாம் எனவும் மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார்.