துறைமுக அதிகார சபைக்குள் 20,000 வேலைவாய்ப்புகள்

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பு துறைமுக ஜெட்டியின் பணிகளையும் அதானி நிறுவனம் பூர்த்தி செய்து வருவதாகவும், 580 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஜெட்டி நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, துறைமுகத்தில் சுமார் 5,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுமார் 15,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் தனியார் துறை மூலம் அதிகளவில் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஊழியர்களுக்கு அதிக நன்மைகள்
குறிப்பாக, துறைமுக அதிகாரசபை கடந்த வருடம் 90 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், அதிலிருந்து ஊழியர் சம்பளம், அரச வரிகள் மற்றும் செயற்பாடுகள் என சகல செலவுகளையும் தவிர்த்து 23 பில்லியன் ரூபா அல்லது 2300 கோடி நிகர இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனியார் துறையினூடாக தொழில்களை உருவாக்கும் போது ஊழியர்களுக்கு அதிக நன்மைகள் வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.