கணவருடன் தொடருந்தில் கொழும்பு சென்ற பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்!

கணவருடன் தொடருந்தில் கொழும்பு நோக்கி பயணித்த பெண்ணொருவரின் கைப்பையில் இருந்த 30 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேருவளை, கங்கனாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுதந்திர தினத்தன்று தனது கணவருடன் தொடருந்தில் கொழும்பு நோக்கி பயணித்த வேளையில் தூங்கிவிட்டதாகவும், கெக்கிராவ தொடருந்து நிலையத்தை கடந்து சிறிது தூரம் சென்ற போது தொடருந்து காவலாளி ஒருவர் வந்து தொடருந்து  பயணிகளுக்கு தங்களின் பொருட்கள் சரியாக உள்ளதா என பார்க்குமாறு தகவல் வழங்கியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தங்க நகைகள் திருட்டு

அதன்பின், அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த கைப்பையை எடுத்து சோதனையிட்டபோது, ​​பெட்டியில் தங்க நகைகள், கையடக்க தொலைபேசி, பணம் இல்லாததையும், பெட்டியில் தேடியபோதும் கிடைக்காததையும் உணர்ந்தனர்.

கைப்பையை யாரோ தொடுவதைக் கண்டதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இந்த திருட்டு தொடர்பில் தொடருந்து காவலர்களுக்கும் கெக்கிராவ தொடருந்து நிலையத்திற்கும் அறிவித்ததையடுத்து மருதானைக்கு சென்று மீண்டும் தனது தந்தை மற்றும் கணவருடன் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த திருட்டில் ஈடுபட்ட நபர் அல்லது குழுவை கைது செய்ய கெக்கிராவ பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.