தவறுகளா? தப்புக்களா? – கச்சதீவு ஒப்பந்தம் : 1974

கச்சதீவு தொடர்பான ஒப்பந்தம் இன்று இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக் அரசியல் பொருளாதாரரீதியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவருகின்ற ஓர் ஒப்பந்தமாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்தும் இத்தீவு சார்ந்து தவறுகளையே இந்தியா செய்து வருவது போலவே பார்க்க வேண்டியுள்ளது.

வடக்கில் பாக்குநீரிணைப் பகுதியில் இந்திய இலங்கை ஆள்புல நீர்ப்பரப்பரப்பு எல்லையில் இட அமைவு பெற்றுள்ளது கச்சதீவு ஆகும்.மனித சஞ்சாரமற்ற வெறும் பாறைத்தீவு இது.இதன் பரப்பு ஆக 82ஹெக்டேர் மட்டுமே. 1974 இல் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் நட்புக்காக அக்கால இலங்கைப் பிரதமராக இருந்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கு அன்பளிப்பாக இந்த சிறிய தீவை தன்னிச்சையாக வழங்கியிருந்தார் இத்தீவின் .இன்றைய கேந்திர முக்கியத்துவம் அப்போது இந்திரா காந்தி அம்மையாருக்கு அன்று புரிந்திருக்க வாய்ப்பில்லை.அன்று தமிழகத்தில் இச்செயலைக் கண்டித்துப் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன.ஆயினும் பலன் ஏதுமில்லை.தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் 2004இல் இத்தீவை மீட்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஒன்றையும் செய்திருந்தார்.அதுவும் கிடப்பில் போனது.

இத்தீவு இப்போது நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ளது. தமிழருக்கு இதுவரை இத்தீவால் எதுவித பயனும் இதுவரையிலும் இல்லை. எனினும் இந்திய மீனவர்கள் சுமார் ஐந்நூறு வரையில் இப்பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர்.மீனவர்கள் இடையிலான முறகல்கள் முடிவின்றித் தொடர்கின்றன.

இப்போது யாழ் தீவகத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மூன்று தீவுகள் சீனாவுக்குத்தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுவிட்டன. கச்சதீவு இத்தீவுகளுக்கு கூப்பிடு தொலைவிலேயே இட அமைவு பெற்றுள்ளது. நினைத்த வேளையில் அத்தீவில் சீனா கால் பதிக்க முடியும். இந்தியா கச்சதீவவை மீட்பது அவ்வளவு சுலபமல்ல

வடபகுதி கடல் வளச்சூறை

இது இந்திய தரப்பு தெரிந்தே செய்யும் தப்பு போலவே படுகிறது. கச்சதீவு சார்ந்துள் கடற்பிரதேசங்களில் முக்கியமாக இலங்கையின் ஆள்புல எல்லைப்பரப்பினுள் பெருந்தொகையானதும் உயர் இழுவைச்சக்தி கொண்டதுமான இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி பெருந்தொகையான கடல்வளங்களை தமிழக மீனவர்கள் வாரி அள்ளிச் செல்லும்நிலை இந்தியாதரப்பால் பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றன. இதனால் ஏற்கனவே போரினால் மோசமாக நலிவுற்றிருந்த வட பகுதி மீனவர்கள் மேலும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாக நலிவடைந்து விரக்தியடைந்த நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றனர். பலமில்லியன் ருபா பெறுமதியான கடல்வளங்கள் தசினமும்ூறையாடிச் செல்லப்படுவதுடன் கடலடி உயிர்ப்பல்வகைமையிலும் பாரிய அழிவுகள் ஏற்பட்டு எதிர்கால கடல்வள இருப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது பலதடவைகள் இதுகுறித்து முறைப்பாடுகள் உரிய தரப்புக்களுடன் செய்யப்பட்ட போதிலும் பலன்ஏதுமற்ற நிலையே தொடர்கிறது.

ஒருநாட்டின் ஆள்புல எல்லைக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து கடல்வளங்களைச் சூறையாடுவது தப்பு எனத் தெரிந்திருந்தும் இதனை அனுமதிப்பது நல்லதல்ல. இந்தியா இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு த் தீர்வினைக்காண முடியாத இந்தியா அரசியல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வைக் காணப்போகிறதோ?

இன அழிப்பு போர் 2009

” இந்தியா உதவியிராவிடின் நாம்போரில் வென்றிருக்க முடியாது” என இலங்கை படைத்தரப்பிலும் அரசுதரப்பிலும் அடிக்கடி கூறப்படுவதுண்டு.ஆகவே ஈழத்தமிழின அழிவில்இந்தியாவுக்கும் பங்குண்டு என்பது தெளிவு. ஆயுத உதவிகள், வழிகாட்டல்கள் ,ஆலோசனைகள் கடல்வழி உதவிகள் எனபல்வேறுவழிகளில் உதவிகள் போரின்போது வழங்கப்பட்டுள்ளன. அதன் விளைவு போரின் பின்னர் வடக்கு நிலம் கடல் முழுவதும் இலங்கைப் படைகள் வசமாயின.மட்டுமல்ல சீனாவின் செல்வாக்கு என்றுமில்லாத வகையில் இந்த பிராந்தியத்தில் ஆழ வேரூன்றி ப்போயுமுள்ளது..

இந்து சமுத்திரத்தில் இந்தியாவைப்பின்தள்ளி அதிகவலிமைகொண்ட ஓர்நாடாக சீனா மிளிர்கிறது. புலிகளை வெளியேற்ற இலங்கைக்கு இந்தியா செய்த பேருதவியானது தென்கோடியில் இந்தியாவின் வாசற் கதவுகளைத் தட்டும் நிலைக்கு சீனாவைக் கொண்டுபோய் விட்டுள்ளது.கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்டது போலவும்,கிணறுவெட்ட பூதம் புறப்பட்ட கதைபோலவும் சீன ட்ராகனின் நுழைவு இந்தியாவைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கைக்கான இதியாவின் இறுதி யுத்தப் பேருதவியானது இந்தியா தெரிந்தே விட்ட மகா தவறா அல்லது தப்பா என்பதைப் புரிந்கொள்ள முடியாதுள்ளது. சீனா இந்து சமுத்திரத்திலும், இலங்கையிலும் கொடிகட்டிப் பறக்க இந்தியா வோ இந்திய உப கண்டம் முழுதிலும் தனதுதேசிய பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும் இந்து சமுத்தரத்தில் கொழும்பு போட்சிற்றி சீனாவுக்கான இனன்னொரு பிடியாகவு மாறி மேலும் தன்னை ஸ்திரப்படுத்தியிருக்கிறது.

யுத்தப் பேருதவியானது இந்தியாவை மட்டும் பாதிக்கவில்லை ஈழத்தமிழர்களின் பேழிவுக்கும் அது வித்திட்டிருக்கிறது. நிலமிழந்து,மொழியிழந்து வாழ்வும் வளமும சிதறிச் சின்னாபின்னமாகிப்போகவும் காரணமாகின .தாய் மொழியிலே சொந்த இடத்தில் நாட்டின் கீதத்தை ப் பாடமுடியாது.,சொந்த இடத்தில் காவல் துறையில் பேசமுடியாத அவல நிலைக்கும் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.

இந்திய –இலங்கை ஒப்பந்தம் – இந்த ஒப்பந்தம் இப்போது என்னவாயிற்று?

இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மூன்று தசாப்தங்கள் கடந்துபோயின எந்தப்பயனுமற்ற அவ் ஒப்பந்தம் அது மரீனா ஆழியில் அமிழ்ந்த படகு போலவும் “பெர்மியூடா’முனைச் சுழியில் சிக்கி காணாமல் போன கப்பல் போலவும் ஆகிவிட்டது.

இணைந்த வடகிழக்கு துண்டாடப்பட்டபோது இந்தியா எங்கே ஒழிந்து கொண்டது? யுத்தம் ஒழிந்து தசாப்தம்கடந்துவிட்டது. மணலாறு வெலிஓயாவாயிற்று இந்துக்கோயில்களெல்லாம் பெளத்த மயம். தொல்லியல் திணைக்களத்தின் தொல்லைகளோ அருவருப்பானவையாகவுள்ளன.

இவ்வாறான ஒருபின்னணியில் இவ் ஒப்பந்தம் எதற்கு? அது அவசியம் தேவைதானா?

யுத்தம் முடிவடைந்த கையோடு இவ்ஒப்பந்தம் உரியவாறு நடைமுப்படுத்ப்படுதற்கான நடவடிக்கைகளை போருக்கு உதவியவர்கள் முன்னெனடுக்கத் தவறியுள்ளனர். இது தரிந்தே செய்த மகா தப்பு. ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பின் பல வேண்டத்தகாத விளைவுகள் பலவற்றையும் இன்று தடுத்து நிறுத்தி யிருக்க முடியும்.

இதனிடையே இவ்வாண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் கொலைகாரர்களையும் வன்புணர்வாளர்களையும் பாதுகாக்கும் தீர்மானம் என வடக்கு முன்னாள் முதல்வர் சாடியிருந்தமையும் இங்கு நோக்கத் தக்கது.

இந்தியா தீர்மானத்தில் எதிர்பார்க்கப்பட்டதுபோல நடுநிலை

வகித்திருந்தது. அந்நாட்டிற்கு ஈழத்தமிழர் விவகாரத்தைவிட அதன் வர்த்தகமும் அதன்தேசியநலனுமே முக்கியம். அவ்வப்போது தேவையான சந்தர்ப்பத்தில் மட்டும் இத்துப்போன பழைய ரெக்கோர்ட் டைப் போடுவதுபோல பயனற்ற பதின்மூன்றாவது சீர்திருத்தத்தைப் பற்றி பாடும் அதுவே அதன் வாடிக்கையாகிப்போய்விட்டது. த.தே.கூட்டமைப்பினரோ இந்தியா உருட்டி விளையாடும் தாயக்கட்டைகளே. எந்த நிலையிலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கப்போவதில்லை என்பது தெளிவு.

இந்திய அமைதிப்படை

அமைதிப்படை என்ற போர்வையில் வடகிழக்கு பகுதிகளில் இப்படை மேற்கொண்ட அடாவடிகள் படுகொலைகள் வன்புணர்வுகள் எல்லாம் பதிவிலுள்ளன.குறிப்பாக யாழ் வைத்திய சாலையில் செய்த படுகொலைகளை எப்படி அழைப்பது ? சமாதானத்தை நிலைநிறுத்த என்று இறங்கி அமைதியைக் குலைத்து பெருத்த அவமானத்துடன் நாடு திரும்பியது.காலம் கடந்தாலும் இவையெல்லாம் இந்தியாவின் தவறுகளே.

தவறுஎன்பது தவறிச் செய்வது.தப்பு என்பது தெரிந்தே செய்வது.தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தியாகணும். இந்தியா இதுவரை திருந்தவுமில்லை வருந்தவுமில்லை போலும் என்பது எமது கணிப்பு.

Previous articleகனடாவில் நடுவீதியில் இலங்கையர்களின் வைரலாகும் சண்டை – வீடியோ
Next articleடெல்டா வைரஸில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசி!