பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!

பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள் என்று கிராமங்களில் ஒரு பழமொழியை சொல்லுவார்கள். அது இப்போது நாட்டுக்கு நல்லாவே பொருந்துகிறது. தற்சமயம் கையிருப்பில் 9,000 MT டீசலும் 6,000 MT பெற்றோலுமே இருக்கிறது. இது நாட்டின் ஒருநாளுக்குரிய நுகர்விற்கு போதுமான அளவாகும். அமைச்சரவையின் கருத்துப்படி யூலை 03 அல்லது 04ம் திகதியே எரிபொருள் கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. ஆனால் அதுவும் நிச்சயமற்றது. ஆக ஒரு நாளிற்குரிய எரிபொருளின் அளவோடு சுமார் இரண்டு கிழமைகள் சமாளிக்க வேண்டிய தேவை உள்ளது.

இவற்றைப்பற்றி கதைத்தும் எழுதியும் ஆகப்போவது எதுவும் இல்லைத்தான் ஆனாலும் வீடு கொழுத்துகிற மன்னனுக்கு நெருப்புக்கொள்ளி எடுத்துக்கொடுக்கிற மந்திரிகளைப்போல வாயை மூடிக்கொண்டு இருந்தும் எதுவும் பயனில்லை. வாயைத் திறந்து தட்டிக்கேட்டு உரக்கப் பேசியே ஆகவேண்டும். சனங்களோ, வியாபாரிகளோ, அரச அதிகாரிகளோ சுய பாதுகாப்பை எண்ணி பேசத்தயங்குவது என்பது மேலும் மேலும் உங்களுடைய பிள்ளைகளை நீங்கள் நடுத்தெருவில் விடுவதற்கு வழி வகுக்கும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற யாராவது பாணுக்கும் பெற்றோலுக்கும் வீதியில் நின்று கண்டிருக்கிறீர்களா? இல்லை, ஏனென்றால் குறித்த ஒரு எல்லைவரை அவர்களுக்கு தேவையானவை நாவும் கிடைக்கும். ஆனால் நீங்களும் உங்களுடைய பிள்ளைகளும் வீதியில் நிற்கிறபோது அவர்கள் வரப்போவதில்லை என்பதுதான் உண்மை. இதுதான் யதார்த்தம். இவைசார்ந்து முன்னர் நான் எழுதிய பதிவு ஒன்றிற்காக எச்சரிக்கை விடுத்திருக்கிறது முகநூல்.

நிற்க !!

மண்ணெண்ணைக்காகவும் பெற்றோலுக்காகவும் கிலோமீற்றர் கணக்காக நிற்கிற நிரையை பார்க்க தலைதான் சுற்றுகிறது. இவற்றின் காரணமாக நிகழ்கிற பரிதாப மரணங்களும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. இவை தொடர்பாக உரையாடிக்கொண்டிருந்தபோது வைத்திய நண்பர் ஒருவர் பரிந்துரைத்த விடங்களை இங்கே எழுதுகிறேன், வெய்யிலில் நிற்கிறபோது முடிந்தவரை பின்பற்றுங்கள் நண்பர்களே.

“நீண்ட நேரம் வெய்யிலில் நிற்பதன் காரணமாக அதிகளவான வியர்வை வெளியேறுகிறது, வியர்வையோடு சேர்ந்து உடலில் உள்ள உப்புக்களும் அதிகமாக வெளியேறுகிறது. இதேநேரம் வெளியேறுகிற நீரின் அளவிற்கு ஏற்ற வகையில் நீர் அருந்தாவிட்டால் உடலினுள் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும், இரத்தத்தின் Volume அளவும் குறைவடையும். அதே நேரம் மணித்தியாலக் கணக்கில் நீண்ட நேரம் நிற்கிறபோதோ அல்லது இருக்கிறபோதோ கைகால்களில் போதுமான அசைவு இயக்கம் இன்மையால் தசைகளுக்கு செல்லும் இரத்தத்தின் அளவும் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும். இதனால் அவற்றிற்கு கிடைக்கும் இரத்தத்தின் அளவும் குறைவடையும், தவிர ஏற்கனவே வியர்வையின் காரணமாக ஏற்பட்ட உப்பிழப்பும் சேர்ந்து தாழ் குருதி அமுக்கம் ஏற்படும். இதனால் உடற்கலங்களுக்கு காவிச் செல்லப்படும் ஒக்சிசனின் அளவு குறைவடையும் மிக முக்கியமாக மூளைக்கு செல்லும் Oxygen குறைவடைகிறபோது சடுதியான Stoke ஏற்பட்டு இறப்பு நேரிடலாம்.

எனவே வெய்யிலில் நீண்ட வரிசையில் நிற்கிறபோது எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு ஜீவனி மற்றும் இளநீர் ஆகியவற்றை அருந்த வேண்டும். நாடு இருக்கிற நிலமையில் இதுகளுக்கு எங்க போறது என்று கேட்பவர்கள் ஒரு போத்தலில் சீனியும் உப்பும் தேவையான அளவு எடுத்து கரைத்து அந்தத் தண்ணீரை எடுத்துச் சென்று பருகுங்கள் நண்பர்களே. இப்பொழுது நம்தேவை வாழ்வை தக்கவைத்தல் ஒன்றே”.

ஒளிப்படம் – முகநூல்.

Article By : @Sharmila Vinothini Thirunavakarasu

Previous articleயாழ் – தமிழகம் இடையே கப்பல் சேவை ஆரம்பம் !
Next articleஎரிபொருள் விலை அதிகரிப்பு – மட்டக்களப்பில் இப்படியொரு நல்லுள்ளமா?