மூச்சுத் திணறும் இலங்கை!

மருத்துவமனைகள் எங்கும் நோயாளர்கள் நிரம்பி வழிகின்றனர். மூச்செடுக்க ஒட்சிசனுக்காக ஒரே கட்டலில் மூவரும் போராடிக்கொண்டிருக்கின்றனர். படுக்கவோர் இடமின்றி தரையிலும் மரத்தடியிலும் தவித்துக்கொண்டிருகின்றனர்.

மரணங்களின் அதிகரிப்பால் மையவாடிகளும் நிரம்பிவழிகின்றன. எங்களின் சகோதர நாட்டில் ஏற்பட்ட நிலைமை எமக்கும் ஏற்படலாம் என பல முறை எச்சரித்த போதிலும் எதனையும் பொருட்படுத்தாததால் இன்று கால் வைத்து நடக்க முடியாதளவிற்கு கொரோனா நோயாளர்களால் மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன.

சிகிச்கைக்காக மருத்துவமனைகளில் மணித்தியால கணக்கில் கால்கடுக்க வரிசையில் போராடுகின்றன உறவுகள். எங்கு பார்த்தாலும் அழுகுரல், நாட்டில் என்ன நடக்கிறது என சற்றேனும் சிந்திக்க முடியாதளவிற்கு நாளுக்கு நாள் தன் உருவத்தை மாற்றிக்கொண்டு முழு உலகத்தை ஆளும் கொரோனாவின் தாக்கம் இலங்கையில் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது.

டெல்ட்டாவின் ஆபத்தை பல முறை எச்சரித்து “ஓர் ஆபத்து தனக்கு வரும் வரை அதன் பாதிப்பை மனிதன் உணர மறந்தால் எங்கள் உயிரையும் மறக்கும் ஆபத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை விரும்பாவிட்டாலும் ஏற்றாக வேண்டும் நாங்கள்.

வீட்டிலிருந்து காலையில் பணிக்குச் சென்ற ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், மரணித்தார், மரணத்தைக்கூட பார்க்க முடியாத நிலைமைக்கு தள்ளப்படுகின்றோம்.

உலக மற்றும் ஆசியாளவில் இலங்கை

ஏப்ரல் மாதத்தில் இலங்கையானது உலக அளவில் 88 ஆவது இடத்திலிருந்தது. மே மாதம் 14 ஆம் திகதி 86 ஆவது இடத்திலிருந்த நிலையில், தற்போது 65 ஆவது இடத்திலுள்ளது. மே 15 ஆம் திகதி ஆசியளவில் 27 ஆவது இடத்திலிருந்தது. தற்போது 22 ஆவது இடத்திலுள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி

” டெல்ட்டா தொற்று இன்னும் 4 அல்லது 5 வாரங்கள் செல்லும் போது அதன் உச்ச நிலையை அடையும். அப்போது, மரணங்கள் எந்தளவு அதிகரிக்கும் என்பதை தீர்மானிக்க முடியாது. அதனாலேயே நாங்கள் இந்தியாவை விட இலங்கையில் 10 மடங்கு உயிரிழப்புகள் ஏற்படும் என எச்சரிக்கைவிடுக்கின்றோம்.

வெஷிங்கடன் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்படும் அறிக்கைகளை உலகளவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளகின்றனர். மே மாத காலப்பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில் 200 – 300 மரணங்கள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டது.

அதன்படி, உரிய நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் மரணங்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டுமாக இருந்தால் எங்களால் எதுவும் செய்ய முடியாது போகும். இலங்கையில் கடந்த காலத்தில் 40 முதல் 50 மரணங்கள் நிகழும் என நாம் கூறியது போன்று மரணங்கள் பதிவாகியன.

எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாவிட்டால் நாளுக்கு 600 மரணங்கள் வரை பதிவாகலாம். மக்களின் செயற்பாடுகளும் அரசின் முடிவுகளும் மாற்றமடைந்தால் 600 மரணங்கள் வரை செல்லாது. எனினும், நாங்கள் எவ்வித முடிவுகளையும் எடுக்காதிருந்தால் குறைந்தது 300 மரணங்கள் பதிவாகுவதை தடுக்க முடியாது.

உரிய நடவடிக்கை எடுத்தால் குறைந்தது 150 – 200 மரணங்களுக்குள் கட்டுப்படுத்த முடியும். நாங்கள் கூறுவது நடக்காது என சிலர் கூறுகின்றனர்.

எனினும், கடந்த வாரத்தில் நாங்கள் கூறியதைக் கொண்டு தற்போது நடப்பதை பார்த்து எங்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

நாளுக்கு நாள் நாடு முடக்குவதை ஒத்திவைக்கும் பட்சத்தில் கொரோனா நோயாளர்கள் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை அதிகரிக்கும். ஒரு நாளுக்கு 100 என்றால் மறுநாள் 600 அடுத்த நாள் 800 என்ற ரீதியிலேயே அதிகரிக்கும்.

30 – 60 வயதுடையவர்களின் இறப்புகளைவிட 70 வயதிற்கு மேற்பட்டோரின் இறப்பு 30 மடங்கும் 60 – 70 வயதிற்குட்பட்டவர்களின் இறப்பு 20 – 30 மடங்கும் அதிகமாகும். வைத்தியசாலைகளின் கொள்ளளவு மீறுமாக இருந்தால் 10 கொரோனா நோயாளர்கள் இறக்கும் போது, 20 – 30 நோயாளர்களையும் இழக்க நேரிடும்.

தொற்று நோயியல் நிபுணர்கள் நாட்டின் தரவுகளை கொண்டு இந்த எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழலாம் என கூறும் போது, அவ்வாறு நிகழ்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் 1200 என்ற நான் கூறிய உயிரிழப்புகளை படுகொலையாகவே கருத முடியும்.

ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைகழக ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் சந்திம ஜீவந்திர

” உலகத்தை அச்சுறுத்திய பிரதான நான்கு திரிபுகளில் அல்பா மற்றும் டெல்ட்டா ஆகிய இரு முக்கிய திரிபுகள் இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறின. இலங்கையில் முதல் முதலில் அல்பா திரிபு ஜனவரியில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து கண்டறியப்பட்டது.

ஏப்ரல் காலப்பகுதியில் சமூகத்திலிருந்து கண்டறியப்பட்டது. ஜூலை முதல் வாரத்தில் 18 வீதமாகக் காணப்பட்ட டெல்ட்டா திரிபின் பரவல் ஜூலை மாத இறுதி வாரத்தில் 98 வீதமாக தீவிரமடைந்துள்ளது.

அல்பா மற்றும் டெல்ட்டா திரிபுகள் இரண்டும் ஒரு மாவட்டங்களிலேயே அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்று நாட்டில் சமூகத்தில் கணடறியப்பட்டு 6 வாரங்களுக்கு பின்னரே தீவிரமாக பரவக் கூடும். தற்போது, டெல்ட்டாவின் பாதிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாத்திரமே தவிர இதன் ஆபத்து எதிர்வரும் வாரங்களிலேயே உணர முடியும்.

எதிர்வரும் 2 – 3 வாரங்கள் மிக மிக முக்கியமானவை. ஒருவருக்கு தொற்றிருக்குமாக இருந்தால் அவர் அருகில் இருக்கும் அனைவருக்கும் தொற்று பரவும் ஆபத்து காணப்படுகின்றன.

நாங்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் இந்த டெல்ட்டா தொற்று மிகவும் ஆபத்தானது என்பதால் 5 வினாடிகள் நாங்கள் முகக்கவசத்தை அகற்றினால் நாங்கள் தொற்றுக்குள்ளாகுவோம்.

டெல்ட்டா தொற்று பரவிய அனைத்து நாடுகளும் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்தது. நாங்கள் டெல்ட்டா தொற்று ஆபத்தின் ஆரம்பத்தில் இருப்பதால் சில கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும். ஒரு தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் டெல்ட்டாவிடமிருந்து எவ்வித பாதுகாப்பு கிடைக்காது.

இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு இரு வாரங்கள் கழிந்த பின்னரே பாதுகாப்பு கிடைக்கும். இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டாலும் இறப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்குமே தவிர கொரோனா தொற்று பரவும் ஆபத்து காணப்படுகின்றது.

இரு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டாலும் சுகாதார விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். டெல்ட்டா ஒருவருக்கு தொற்றினால் அந்த வீட்டில் அனைவருக்கும் தொற்றுபரவும்.

இலங்கையில் டெல்ட்டா தொற்று பரவும் போது புதிய திரிபுகள் உருவாகும் ஆபத்தான நிலையிலேயே இருக்கின்றோம். தரவுகளில் வெளியிடப்படும் நோயாளர்களை விட 10 மடங்காளர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும்.

ஜூன் மாத ஆரம்பத்தின் சுற்று நிரூபங்களுக்கு அமைய தற்போது செயற்பட்டால் ஒகஸ்ட் மாதத்தில் நாங்கள் பாரிய ஆபத்துக்கு முகம் கொடுப்போம்.

கொரோனா தொற்று இல்லையென உறுதிபடுத்தப்படும் வரை சந்தேகத்துக்குரிய கொரோனா நோயாளர்களாகே பார்க்கப்பட வேண்டும். தற்போது வைத்தியசாலைகள் அதியுட்ச செயல்திறனை தாண்டியுள்ளன. இதனால் எதிர்வரும் நாட்களில் உண்ண உணவின்றி இறப்பதா? அல்லது ஒட்சிசன் இன்றி இறப்பதா? என்பதே பிரச்சினையாக மாறும்.

ஒருவருக்கு உண்ண உணவில்லை என்றால் மற்றொருவர் உணவு கொடுக்க முடியும் என்பதால் உண்ண உணவின்றி இறக்க மாட்டார்கள். ஒட்சிசன் இல்லை என்றால் நாங்கள் உயிரோடிருக்க முடியாது.

கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பிரிவின் குடும்பநல மருத்துவ துறையின் பிரதானி ருவாய்ஸ் ஹனிஃபா..

” வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளதுடன், நாங்கள் சேவையாற்றும் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் இருப்பதற்கு இடமில்லாதுள்ளனர்.

இனிவரும் நோயாளர்களுக்கு எங்கு? எவ்வாறு? சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். அடையாளம் காணப்படும் நோயாளர்களில் 15 வீதமானவர்களுக்கு கட்டாயம் வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும். 5 வீதமானவர்களுக்கு அதி தீவிர சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.

பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் வைத்தியர்களால் தற்போதைய வேலைப்பளுவிற்கு மத்தியில் வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் முறைமையை நடைமுறைப்படுத்துவது பெரும் சிரமமாகும்.

இலங்கையிலுள்ள வைத்தியர்கள் சுய விருப்பத்துடன் வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கும் முறைமையில் இணைய விரும்புகின்றனர்.

குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரை எங்கு சிகிச்சைக்கு அனுப்புவது என்பதை சுகாதார அதிகாரிகளால் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அந்த குடும்பத்தாரும் நோயாளியும் தீர்மானிக்க முடியாது. எனக்கு சிறு நோய் அறிகுறிகளே இருக்கின்றது ஆகவே, நான் வீட்டில் இருக்கின்றேன் என நோயாளிகள் தீர்மானிக்க வேண்டாம்.

வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு வீட்டிலிருந்து வேலைத்தளத்திற்கு வேதைத்தளத்திலிருந்து வீதியில் சிகிச்சையளிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

வீதிகளில் யாரேனும் வீழ்ந்துகிடந்தால் மனித தன்மையுடன் சென்று அவர்களுக்கு உதவுங்கள். கொரோனாவிலிருந்து உங்களையும் பாதுகாத்துக்கொண்டு ஏனையோரையும் பாதுகாப்பது மனித தன்மையாகும். குறிப்பாக, உரிய அதிகாரிக்கு அழைத்து அவருக்கு உதவுங்கள்.

Previous articleகைமீறிப் போகிறதா நிலைமை? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சடலங்களின் புகைப்படங்கள்!
Next articleஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் முடக்கநிலை அறிவிப்பு வெளியாகலாம்!