க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிட முடியாத நிலை !

2020 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2020 சாதாரண தரப்பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தார்கள். இதில் 1 இலட்சத்து 69 ஆயிரம் பரீட்சார்த்திகள் நுண்கலை சார்ந்த பாடங்களைத் தெரிவு செய்திருந்தார்கள்.

இந்நிலையில் தற்சமயம் நிலவும் கொவிட் வைரஸ் பரவலினால் நுண்கலை சார்ந்த பாடங்களை தெரிவு செய்த பரீட்சார்த்திகளுக்கான செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

மாணவர்களுக்கான செய்முறைப் பரீட்சையை நடத்தி பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை விரைவில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்த்திருந்தாலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறினார். அத்துடன் ஆகஸ்ட் இறுதிக்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்பிறகு படிப்படியான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு முறையான முறையில் பாடசாலைளை திறப்பது எங்கள் நோக்கமாக இருந்ததாகவும், ஆனால் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், அது நிச்சயமற்றது எனவும் அவர் கூறினார்.

இத்தகைய சூழ்நிலையில், ஆன்லைன் கல்வியை வலுப்படுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவது மிகவும் முஅவசியம் என சுட்டிக்காட்டிய அவர், ஆசிரியர்களும் அதிலிருந்து வெளியேற முயற்சித்தால், அது சரியான வசதிகள் கூட இல்லாத சிறுவர்களுக்கு அநீதியாகவும், அடக்குமுறையாகவும் இருக்கும் எனவும் குறிப்பிட்ட கல்வி அமைச்சர், அடுத்த பட்ஜெட்டில் ஆசிரியர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்