மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கத் தடை: பொதுப்போக்குவரத்தும் இடைநிறுத்தம்!

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டம் தடை செய்யப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்துடன் இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையேயான அனைத்து பொதுப்போக்குவரத்து சேவைகளும்; எதி;ர்வரும் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியுடன், பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது, தடுப்பூசி அட்டையை பரிசோதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

சுகாதாரம், துறைமுகம், விமான நிலையம் உட்பட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள், விவசாயத்துறை மற்றும் முதலீட்டு சபையினால் அனுமதி வழங்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் ஆகியோருக்கு மாத்திரம், மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி உள்ளது.

அத்துடன், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை சேவைக்கு அழைக்கும்போது, அவசியத்தன்மை கருதி, குறித்த மாகாணத்திற்கு வெளியே வசிக்கும் ஊழியர்களை அழைப்பதற்கான அதிகாரம் நிறுவனப் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தனியார் வரத்தக நிலையங்களில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, பணியிடத்தின் இடப்பரப்பை கவனத்திற்கொண்டு, பணிக்குழாமினரை சேவைக்கு அழைக்க முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.