போதைப்பொருள் தொடர்பில் தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி…!



தென்னிலங்கையில் சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 343 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 11 சந்தேகநபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

309 பொதிகளில் 343 கிலோகிராம் 456 கிராம் ஹெரோயின் காணப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 3,400 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் போதைப்பொருள் மற்றும் இழுவை படகுகள் உள்ளிட்ட மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, போதைப்பொருள் தொடர்பில் துல்லியமான இரகசிய தகவல்களை வழங்குவோருக்கு எதிர்காலத்தில் பாரிய வெகுமதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட 350 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருட்களை பரிசோதித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.