வவுனியாவில் கோட்டாபயவின் வருகையால் அவசர அவசரமாக அகற்றப்பட்ட தமிழ் மொழி கல்வெட்டு!



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) வருகையால் வவுனியா பல்கலைக் கழகத்தின் திரை நீக்கபகுதியில் இருந்த தமிழ் மொழி கல்வெட்டு மறைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா பல்கலைக் கழகத்திற்கு இன்று விஜயம் செய்யும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அதனை அங்குராப்பணம் செய்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில் பல்கலை கழகத்திற்கு நுழைவாயில் ஊடாக உட் சென்று பல்வேறு பீடங்களுக்கும் பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் முக்கோண வடிவில் பல்கலைக்கழகத்தின் பெயருடன் கூடிய கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

வீதியில் இருந்து உட் செல்லும் போது காட்சிக்கு புலப்படும் வகையில் தமிழ் மொழியும் மற்றைய இரு பங்கங்களில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வீதியில் இருந்து பல்கலைக்கழகத்திற்குள் செல்லும் போது பீடங்களுக்கு பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் தமிழ் மொழியில் காட்சி கொடுத்த கல்வெட்டு அவசர அவசரமாக அகற்றப்பட்டுள்ளது.

அகற்றப்பட்ட கல்வெட்டு மறுபக்கம் மாற்றப்பட்டுள்ளதுடன் முன் பகுதியில் சிங்கள மொழி கல்வெட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.