யாழில் குருக்களின் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் கைது!

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலணையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில் திருட்டு நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த திருட்டுச் சம்பவம் கடந்த ஜனவரி மாதம் பிற்பகலில் இடம்பெற்ற நிலையில் யாழ்ப்பாணம் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் யாழ் மூத்த காவல் துறை அத்தியட்சகரின் கீழ் உள்ள தலைமைப் காவல் துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்டக் குற்றத்தடுப்புகாவல் துறையினரால் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து சம்பவத்தில் வேலணையைச் சேர்ந்த 24 வயதுடைய பிரதான சந்தேக நபர் கஸ்தூரியார் வீதியில் வைத்து யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

முதன்மைச் சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வேலணையைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதன்மைச் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையாகி தொடர்ச்சியாக திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் கைதான் சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.