வவுனியாவில் நால்வரின் மரணம் தொடர்பில் நண்பனின் பகீர் வாக்கு மூலம்!

வவுனியாவில் கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் வவுனியாவை மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொலையா? தற்கொலையா? அதையும் தாண்டி இதற்கான காரணத்தை அனைவரும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

வவுனியா, அம்மாபகவான் வீதி, குட்செட் வீதியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்த சிவபாலசுந்தரம் கௌசிகன் (வயது 42) என்பவரின் குடும்பமே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குடும்பத்தலைவர் சிவபாலசுந்தரம் கௌசிகன் தனது 9 மற்றும் 3 வயது பிள்ளைகளின் பெயர்களை தனது கையில் பச்சை குத்தியுள்ளார்.

மனைவி (வயது 36) வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிகிறார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்.

செவ்வாய்க் கிழமை காலை கௌசிகனின் நண்பர் ஒருவர் கௌசிகனின் தொலைபேசிக்கு அழைத்தார் ஆனால் பதில் இல்லை. கௌசிகனின் வாட்ஸ்அப் அதிகாலை வரை செயல்பட்டது.

தொடர்ந்து அழைத்தும் பதில் வராததால் கௌசிகனின் வீட்டிற்கு சென்றார்.

வாசலில் நின்று பலமுறை அழைத்தும் வீட்டுக்குள் இருந்து பதில் வரவில்லை.

யார் அழைத்தாலும் ஓடிவரும் பிஞ்சுப் பாதங்கள் நடமாடிய அந்த வீடும் வளவும் அமைதியாகவே உறங்கிக் கொண்டிருந்தது.. இதைத்தொடர்ந்து நண்பர் கதவை திறந்து பார்த்தபோது குடும்பத்தினர் இறந்து கிடந்தனர்.

கௌசிகன் தூக்கில் தொங்கியும், மனைவி படுக்கையில் இறந்தும், இரண்டு குழந்தைகள் ஒவ்வொரு கதிரைகளில் இறந்து கிடந்தனர்.

அவர்களின் உடல்கள் கழுத்துவரை போர்வையால் மூடப்பட்டு, நால்வரின் நெற்றியில் விபூதி பூசப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த வவுனியா நண்பர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினர் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொலையா தற்கொலையா என இருவேறு கோணங்களில் விசாரணை நடத்தி பலரது குரல் ஆதாரங்களையும் பதிவு செய்திருந்தனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

புதிய பழக்கம் கொண்ட தொழிலதிபர்களும் கௌசிகனுடன் நட்பாக பழகியுள்ளனர். அதனால் கௌசிகனும் புதிய தொழில் முயற்சிகளில் இறங்கினார். இதனால் அவர் தனது நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார்.

தொழில் நஷ்டம் காரணமாக கடன் சுமை ஏற்பட்டுள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதனால் வீட்டில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அவரது வாகனம் ஒன்று இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னரே ஒருவர் பெற்றுள்ளார். அது கொடுத்த காசுக்காக பெறப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.