மட்டக்களப்பின் வெவ்வேறு பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு சம்பவங்களில் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் நேற்று (05.04.2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோவிலில் உள்ள இரும்புக்கம்பிகள் திருட்டு
ஊறணியிலுள்ள கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலையத்தினுள் நேற்று உள்நுழைந்த திருடன் ஒருவன் அங்கு கோபுர கட்டிட புனரமைப்பிற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருடிக்கொண்டிருந்தபோது கோவில் காவலாளி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

பின்னர் கம்பிகளை திருடிக் கொண்டு வெளியே வரும் போது திருடனை பொலிஸார் மடக்கிப்பிடித்து கைது செய்ததுடன் 10 இரும்பு கம்பிகளை மீட்டுள்ளனர்.

விசாரணையின் போது நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் என்பவனே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவருகிறது.

துவிச்சக்கர வண்டி திருட்டு
சீலாமுனை பகுதியில் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட 2 துவிச்சக்கரவண்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மாமனாரை கோடாரியால் தாக்கிய மருமகன்
இதேவேளை புதூர் பிரதேசத்தில் கடந்த மாதம் 4ம் திகதி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் காரியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற 65 வயதுடைய மாமனாரை கோடாரியால் தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி வந்த 44 வயதுடைய மருமகனை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.