அக்காவுக்கு பார்த்த மணமகனை மணம் முடித்த தங்கை

பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் என்ற கிராமத்தில் நிஷா என்ற பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

சாப்ரா நகரின் பின்டோலியில் வசிக்கும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமார் மணமகன். திருமணத்தன்று மணமகன் மணமேடைக்கு வந்துவிட்டார்.

 தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டல்

மணப்பெண்ணும் மணமேடைக்கு வந்து, இருவரும் மாலை அணிவித்துக்கொண்டனர். உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அடுத்து தாலி கட்டவேண்டும்.

அப்போது மணப்பெண்ணின் தங்கை திருமணம் நடைபெறும் கட்டிடத்தின் மாடியில் ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டல் விடுத்து உள்ளார்.

ராஜேஷ் குமாரை எனக்குத்தான் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று கூறி ரகளையில் ஈடுபட ஆரம்பித்தார். இதனால் திருமண வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது.

அந்த பெண்ணிடம் அவரின் பெற்றோர் பேசிப்பார்த்தனர். ஆனால் அப்பெண் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். அவர் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தால் திருமண வீட்டில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்தனர். பொலிசார் உள்ளூர் தலைவர் மற்றும் மணமகன் ராஜேஷிடம் பேசினர்.

கல்லூரியில்  தங்கையுடன் காதல்

அக்காவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன்பே தனக்கு தங்கை புதுலுடன் காதல் என இரு குடும்பத்தாரிடம் கூறினார் ராஜேஷ். சாப்ராவில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது புதுலுடன் காதல் ஏற்பட்டதாக கூறினார்.

இருவரும் ஒருவரையொருவர் காதலித்திருக்கின்றனர். காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு ரிங்குவுடன் ராஜேஷுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் விரக்தியடைந்த புதுல், திருமணத்தை நிறுத்துவது அல்லது தற்கொலை செய்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

பின்னர், மணமகளும் தனது தங்கை புதுல் குமாரியை மணமகன் ராஜேஷ்குமார் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டதை அடுத்து   ஒருவழியாக மணப்பெண்ணின் தங்கையை மணமுடித்து ராஜேஷ் ஊர் திரும்பினாராம் .