இன்று மின்வெட்டு ஏற்படுமா?

மின்சார சபையை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களும் இன்று (21) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் 1.00 மணிக்கு விஹார மகாதேவி பூங்காவில் விசேட மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் எனவும் அதன் தலைவர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டார்.

“இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று பிற்பகல் 1 மணிக்கு விஹார மகாதேவி திறந்தவெளி அரங்கில் மாபெரும் கண்டன தொழிற்சங்க கூட்டு மாநாட்டை நடாத்துகின்றன.

இதற்கு முக்கிய காரணம் இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது. இந்நிலையில் மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலங்கை மின்சார சபை போன்ற மாபெரும் நிறுவனத்தை தேசிய பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளில் திணிப்பது பாரதூரமான நிலை. அந்த சட்டத்தின் உள்ளடக்கத்துடன், தேவைப்பட்டால் தொடர் வேலைநிறுத்தம் செய்வது என, இன்றைய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இன்று இலங்கை மின்சார சபை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை நடத்தும் ஊழியர்களின் தேவையற்ற செயலிழப்புகள் தவிர அனைவரும் சுகயீன விடுப்பு தெரிவித்து கொழும்பு விகாரமஹாதேவி பூங்கா அருகே வருவதாகவும் தெரியவந்துள்ளது.