ஞாயிற்றுக்கிழமை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

வாழைச்சேனை கோறளைப்பற்று வேல்ட் விஷன் மற்றும் சிறுவர் கழக impact plus  நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக ஞாயிறு தினங்களில் பிரத்தியோக வகுப்புகள் நடாத்துவதை தடை செய்யக் கோரி திணைக்கள அதிகாரிகளிடம் மனுக்கள் கையளிக்கப்படுள்ளன.

வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள 200 சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களினால் கையொப்பம் இடப்பட்ட மனுக்கள் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர்  ரி.அனந்தரூபன், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் தயாநந்தி திருச்செல்வம், வாழைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்
 அமலினி, வாழைச்சேனை பிரதேச சபை உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.வசந்தராஜா ஆகிய அதிகாரிகளிடம்  கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜர் வழங்கும் நிகழ்வில் வாழைச்சேனை வேல்ட் விஷன் முகாமையாளர் அந்தோனிப்பிள்ளை ரவீந்திரன்,  வாழைச்சேனை வேல்ட் விஷன் அபிவிருத்தி இலகுபடுத்தினர்  கரோலினா றாகல் மற்றும் தொழில்முறை உளவியல் ஆலோசனை மையம் திறன் அபிவிருத்தி  இலகுபடுத்தினர் மரியதாசன் சூசைதாசன் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஞாயிற்றுக் கிழமையில் நடைபெறும் வகுப்பிற்கு தடை கோரி மனு கோரல்

எங்களுடைய வாழைச்சேனை பிரதேசத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் மற்றும் பொது வகுப்புக்கள் நடைபெறுவது வழக்கம். நாங்கள் தங்களுடைய மதிப்பிற்குரிய கவனத்திற் கொண்டு தரப்படும் மனுவானது எமது பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வகுப்புக்களில் தடை விதிக்குமாறு கூறி வந்துள்ளோம்.

எம்மால் கொடுக்கப்படும் காரணமாவது ஞாயிறு தினங்களில் மறைக்கல்வி வகுப்பு, அறநெறி வகுப்பு மற்றும் சமயம் சார்ந்த செயற்பாடுகள் காலை வேளையில் நடைபெறுவதும் மற்றும் மிகுதியான நேரங்களில் அன்றைய நாளின் பொழுதை பிள்ளைகள் பெற்றோருடன் குதூகலமாக களிப்பதும் மற்றும் குடும்ப ஒற்றுமையை வளப்படுத்துவதும் ஆகும்.

 ஆகவே இதனை கருத்திற் கொண்டு மேற்கூறப்பட்ட வேண்டுகோளுக்கமைய வகுப்புகளை ஞாயிறு தினங்களில் தடை செய்வதற்கு பெற்றோருடன் பிள்ளைகள் இணைந்து இந்த மனுவை கையளிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.