காலவரயரையின்றி மூடப்படும் பேருந்து தரிப்பிடம்

ஹட்டன் பேருந்து தரிப்பிடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் பேருந்து தரிப்பிடம் தூய்மையாக இல்லை என முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், தற்போது ஹட்டன் பேருந்து தரிப்பு நிலையத்தின் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேருந்து நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கான அறிவிப்பு
இதன் காரணமாக தற்காலிகமாக பேருந்து தரிப்பிடம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய ஹட்டன், பொகவந்தலாவை, மஸ்கெலியா, ஒஸ்போன், நோட்டன், காசல்ரீ, சாஞ்சிமலை, ஓல்டன், போடைஸ் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் ஹட்டன் தபால் நிலையம், சுசி ஆடையகம் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹட்டனிலிருந்து- கொழும்பு, கண்டி, தலவாக்கலை, வட்டவளை, நாவலப்பிட்டி, நுவரெலியா உட்பட அப்பகுதியில் செல்லும் தனியார் –அரச பேருந்துகள் கார்கில்ஸ் புட் சிட்டி அமைந்துள்ள பகுதிகளில் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான நிலையில் பேருந்து தரிப்பிடம்
மலையகத்தின் நுழைவாயிலாக காணப்படும் ஹட்டன் பேருந்து தரிப்பு நிலையம் கடந்த பல வருடங்களாக குன்று குழியுமாக காணப்பட்டுள்ளன.

இதனால் மழை காலங்களில் பேருந்து தரிப்பு நிலையத்தில் உள்ள குழிகளில் நீர் நிறைந்து குளங்கள் போல் காட்சியளித்தன. இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

குறித்த பேருந்து தரிப்பு நிலையத்திற்கு வருகை தந்தே இலங்கையின் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா பிரதேசங்களான சிவனொளிபாதமலை மற்றும் நுவரெலியா,உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு செல்ல வேண்டும் பேருந்து தரிப்பு நிலையம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தனர்.

பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எதிர்நோக்கும் அவலம் குறித்து பல தடைவைகள் ஊடகங்களில் வெளியாகின.

இந்நிலையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக சுமார் 34 லட்சம் ரூபா செலவில் புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் டிப்போவின் உதவி முகாமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த அபிவிருத்தி வேலைதிட்டம் சுமார் 13 நாட்களில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.