கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய சிறை அதிகாரி கைது 

பொரளை மற்றும் கலபிடமடை ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் கொழும்பு விளக்கமறியலின்  சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டில் பயணப் பை, ஒரு ஜோடி கறுப்பு காலணிகள், நீல துண்டு, வெள்ளை நிற அரை காற்சட்டை, தொப்பி, கையடக்கத் தொலைபேசி, மோட்டார் சைக்கிளின் சாவி மற்றும் அடையாள அட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம்  14 ஆம் திகதி கலபிடமடை  துனுமலை பகுதியில் வாகனத்தில் பயணித்த வேரகொட ஆராச்சிலாகே சரத் வேரகொடவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வதற்காக  மோட்டார் சைக்கிளை செலுத்தியமை தொடர்பில் கடந்த 2 ஆம் திகதி வரகாபொல நியந்துருபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சிறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

இதற்கு மேலதிகமாக, இந்த வருடம் மே மாதம் 20 ஆம் திகதி துப்பாக்கியால் சுட்டு மனித கொலையை செய்த “வானத்தே சுட்டாங்” என்ற சந்தேகநபருக்கும் இன்னுமொரு அடையாளம் தெரியாத சந்தேகநபருக்கும் தங்கியிருப்பதற்காக குறித்த சிறை அதிகாரிக்கு சொந்தமான  இராஜகிரிய நாவல அவென்யூவில் உள்ள தனது மூன்று மாடி வீட்டின் மூன்றாவது மாடியை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர்  பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா, நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்ஸ்லம் டி சில்வா ஆகியோரின் பணிப்புரையின் பேரில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.