‘நிபா’ வைரஸ் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தல்!

இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்தவொரு இடர் நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் ‘நிபா’ வைரஸைக் கண்டறிவதற்குத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் அவை இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த வைத்தியர் ஜானகி அபேநாயக்க, நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உலகளாவிய ரீதியில் குறிப்பிட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் தயாரிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நிபா வைரஸ் பரவுவது மிகவும் மெதுவாக இருப்பதால், நாடுகளுக்கு இடையில் பரவும் அபாயம் இல்லை என தொற்று நோய்கள் பிரிவுப் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.