பேச்சுவாரத்தைகள் மூலமே பிரச்சினைகளுக்கான தீர்வினை காண வேண்டும்

காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களை புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுவாரத்தைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை காணவேண்டும் என்ற சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் கருத்துக்கள் தன்னை கவர்ந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், உணர்வுபூர்வமான பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற சீன ஜனாதிபதியின் கருத்தினை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய அரசியல் பயணம் அமைந்துள்ளதாகவும், குறித்த நம்பிக்கையுடனேயே ஜனநாயக நீரோட்டதில் இணைந்து கொண்டு தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதைய அரசாங்கத்தில் சிரேஸ்ட அமைச்சர்களுள் ஒருவராகவும் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இடம்பெற்ற கடலசார் ஒத்துழைப்பிற்கான கருப்பொருள் எனும் தொணிப் பொருளில் கடந்த 18 ஆம் திகதி சீனாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பெல்ட் அன் றோட் எனப்படும் சீனாவினால் உருவாக்கப்பட்டு வருகின்ற சர்வதேச தொடர்பாடல் முயற்சியின் ஓரு பகுதியாக இடம்பெற்ற குறித்த மூன்றாவது சர்வதேசக் கலந்துரையாடலில் இலங்கையின் பிரதிநிதியாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் உரையற்றுகையில்,

ஆயுதப் போராளியாக ஒருகாலத்தில் செயற்பட்ட நான், பேச்சுவார்த்தைகள் மூலமே எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்பததை புரிந்து கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டு செய்றபட்டு வருகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

குறித்த சர்வதேச கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஆரம்ப உரையாற்றிய சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியைப் முன்பெடுப்பதில் காலாவதியான புவிசார் அரசியல் சூழ்ச்சியை சீனா பின்பற்றாது எனவும், அனைத்து தரப்பினருக்கும் வெற்றியளிக்கக் கூடிய ஒரு புதிய வகை சர்வதேச உறவுகளை வளர்க்க வேண்டும் என்பதுடன், மோதலின்றி நட்பு ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலமே உணர்வுபூர்வமான பிரச்சினைகளை தீர்ககவும், நீதியின் அடிப்படையிலான மத்தியஸ்தத்தை ஊக்குவிக்கவும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தமையையே கடற்றொழில் அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆயதப் போராடத்தின் ஊடாகவே தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் பாலஸ்தீன விடுதலைப் போராட்ட அமைப்புக்களிடம் ஆயுதப் பயிற்சியை பெற்றக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் ஆயுதப் போராட்ட அமைப்பின் தலைவர்களுள் ஒருவராக செயற்றபட்டிருந்த நிலையில், ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.