வருமான வரி மோசடிகளை தடுக்க தகவல் கட்டமைப்பு 

வருமான வரியேய்ப்பு மற்றும் மோசடிகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் மற்றும் நபர்களை கண்டறியும் நவீன தொழில்நுட்பத்திலான விசேட தகவல் கட்டமைப்பை எதிர்வரும் டிசம்பர் மாதத்திலிருந்து செயல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அலுவலக பிரதாணி சாகல ரத்நாயக்கவின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சீரற்ற அணுகல் மேலாண்மை தகவல் கட்டமைப்பு  ( Random Access Management Information System) என்ற தொழில்நுட்பத்தையே வருமான வரியேய்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் பயன்படுத்தவுள்ளது.  தேசிய வருமான வரி திணைக்களத்தின் கீழ் இந்த நவீன தொழில்நுட்ப தகவல் கட்டமைப்பு செயல்படுத்தப்படும்.

வங்கிகள், சுங்கம் மற்றும் கலால் தினைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் இந்த தகவல் கட்டமைப்பின் கீழ் கண்காணிக்கப்படவுள்ளன. மேலும் இந்த தொழில்நுட்பத்தின் ஊடாக வரி வருமானத்தை எளிதாக சேர்த்துக்கொள்ள முடிவதுடன் வரி மோசடிகளில் ஈடுப்படுபவர்களையும் அடையாளம் காண முடியும். எவ்வாறாயினும் இந்த திட்டம் பல வருடங்களுக்கு முன்பாகவே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பல அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்று  குறித்த தொழில்நுட்ப கட்டமைப்பு குறித்து பயிற்சிகளை பெற்று வந்திருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல்வேறு தடைகள் ஏற்பட்டு செயல்படுத்த முடியாமல் போனது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், மீண்டும் வருமான வரி மோசடிகளை தடுக்கவும் வரி வருமானத்தை அதிகரிக்கவும் வகையில் குறித்த திட்டத்தை முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.