மோசமடையும் வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை நாளைய தினம் (18) எச்சரிக்கை மட்டத்தில் பதிவாகக் கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.  

அதிகூடிய வெப்பநிலை

இலங்கையில் இன்று (17) காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் பகுதியிலேயே அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.

குருநாகலில் 38.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கொழும்பில் 33.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

மழை பெய்யக்கூடும்

இந்த நிலையில், எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நாட்டின் சில பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மீண்டும் சூரியன் உச்சம் கொடுப்பதால், வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.