இலங்கையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை வீசிய கடும் காற்று காரணமாகப் பல பகுதிகளில் மின்தடை!

இலங்கையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை வீசிய கடும் காற்று காரணமாகப் பல பகுதிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டிருந்து. சீரற்ற காலநிலை காரணமாக நாடு தழுவிய ரீதியில் 475,000 பேர் மின் துண்டிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரையில் மின் துண்டிப்பு தொடர்பில் 12,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மின் வழங்கலை வழமை நிலைக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

காலி, மாத்தறை, கிரிபத்கொட, கண்டி, பேராதெனிய, குளியாபிட்டிய, குருநாகல், களனி, இரத்மலானை, மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் மின் துண்டிப்பு காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் கண்டி- கம்பளை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

ஒரு சில பகுதிகளில் சிறு அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தி மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை ஒரு வான் கதவு திறக்கப்பட்ட நிலையில், நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று காலை மேலும் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டன.

அத்துடன் சென்ட் லேயர் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மத்திடம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

ஒரு சில பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்றுள்ளதால் நதிகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், நதியோர பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தற்போதும் அப்பிரதேசங்களில் அமுலில் உள்ளதெனத் தேசிய கட்டட ஆய்வு மைம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் மழைவீழ்ச்சி குறைவடையும் எனக் காலநிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.