திருமணத்திற்காக பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட மகனை ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்த தந்தை!

இன்று நடக்க இருந்த தனது திருமணத்திற்காக, நேற்றிரவு நண்பர்களுக்கு மதுவிருந்து வைக்க தந்தையிடம் பணம் கேட்டு மகன் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில், தகராறு செய்த மணமகனை வெட்டிக்கொலை செய்த லோடுமேன் தந்தை கைது செய்யப்பட்டார்.

வாடிப்பட்டி அருகே அய்யனகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன்( 49 )லோடுமேன். இவருக்கு ராணி(45) என்ற மனைவியும் சுபாஸ்(22), பிரதீப்(20 )ஆகிய 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இதில் பிரதீப் ஆடு வளர்த்துக் கொண்டு லோடுமேன் வேலையும் செய்து வந்தார். இன்று (11ந்தேதி) பிரதீப்பிற்கும் அவரது உறவினர் பெண்ணிற்கும் திருமணம் நடத்த பெற்றோர்களால் முடிவுசெய்து திருமண வேலைகள் நடந்து வந்தது.

இந்நிலையில் பிரதீப் நேற்று மாலை மது குடித்துவிட்டு வீட்டில் வந்து நண்பர்களுக்கு மதுவிருந்து வைக்கவேண்டும் அதற்கு பணம் கேட்டு தந்தை இளங்கோவனிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு இளங்கோவேன் பணம் தரமுடியாது, குடிக்ககூடாது, நாளை திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி நடக்ககூடாது என்று கூறியுள்ளார்.

நீ பணம் தரவில்லை என்றால் நான் திருமணம் செய்யமாட்டேன் என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றியதில் கைகலப்பானது. அப்போது ஆத்திரமடைந்த பிரதீப் அங்கிருந்த கோடாரியை எடுத்து இளங்கோவனை வெட்ட முயன்றார்.

அதை இளங்கோவன் பறித்து கைபிடியில் திருப்பி அடிக்கமுயன்ற போது எதிர்பாராதவிதமாக பிரதீப் கழுத்தில் கோடாரியால் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் பிரதீப் பிணமானார்.

இது சம்மந்தமாக வாடிப்பட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ் வழக்குப்பதிவு செய்து லோடுமேன் தந்தை இளங்கோவனை கைது செய்து விசாரணைசெய்து வருகிறார். இன்று திருமண கோலத்தில் இருக்க வேண்டிய இளைஞர், மது விருந்து தகராறில் பிணவரையில் உள்ளார்.

Previous articleகொழும்பு வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஆடை மாற்றும் போது படமெடுத்த வைத்தியருக்கு நேர்ந்த கதி!
Next articleஇந்தியாவில் ஒரே நாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா!